top of page

வேதாளமும் வேதியனும் பாகம் 8

Updated: Jun 15, 2022


திரெளபதி பஞ்ச பத்தினிகளில் ஒருவரா?


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய மரத்தில்

ஏறி, அதில் தொங்கிக்கொண்டிருந்த பிரேதத்தைக் கீழே தள்ளி, தோளில்

தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். அந்த உடலில் குடி கொண்டிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.


வேதியா! மனித வாழ்வின் உன்னத நெறிகளான அன்பு, பணிவு நேர்மை, ஓழுக்கம் போன்றவற்றை எடுத்துரைக்கும் காவியமாகத் திகழ்கிறது இராமாயணம். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று வாழும் உயர் பண்பாட்டினை உலகுக்கே உணர்த்தியவன் ஸ்ரீராமன்.


தந்தை சொல் மீறாத தனயனாக, ஏக பத்தினி விரதனாக, எதிரிக்கும் இரங்கும் குணவானாக, பொறுமையின் கடலாக, மனிதனை மனிதனாக

மதித்து அரவணைத்த செம்மலாக, தலை சிறந்த வீரனாக, பண்பிலே தெய்வமாக, பணிவிலே சிறந்த சீடனாக வாழ்ந்து காட்டியவன்தான் ஸ்ரீ இராமன்.


இராமனின் செயல்களிலேயே சில குறைகள் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான விளக்கமும் அறிஞர்களால் கூறப்பட்டுவிட்டது.


நிராயுதபாணியாய் நின்றிருந்த இராவணனிடம் இரக்கம் காட்டி ‘இன்று போய் நாளை வா’ என அனுப்பிய பரந்த உள்ளம் படைத்த இராமனின் செயல்களில் சிறுமை கண்டுபிடிப்பது நமது சிற்றறிவின் குறையே ஆகும் எனத் தெளிந்தோம்.


வேதியா! மகாபாரதத்திலே எனக்கொரு சந்தேகம். இந்த சந்தேகக் கேள்வி வெடிகுண்டாக மாறி உன் சீற்றத்தை வெடிக்கவைக்குமோ? அல்லது திரி நனைந்து போன பட்டாசாக அடங்கிப் போகுமோ எனக்குத் தெரியாது.


ஆனாலும் எனது சந்தேகத்தைத் தெளிவாக்குவது உன் கடமை. இல்லையென்றால் என்னை என் போக்கில் விட்டு விட்டு நீ மட்டும் புறப்படலாம்.


வேதியா, கற்பில் சிறந்த மாதரசிகளைப் பற்றி நாம் புராணங்களில் படித்திருக்கிறோம்.


அத்திரி மகரிஷியின் பத்தினி அனுசூயை, வசிட்ட மகரிஷியின் பத்தினி அருந்ததி, இராமனின் துணைவி சீதை, சத்தியவானின் மனைவி சாவித்திரி, நளாயினி போன்றவரை சிறந்த பத்தினிகளாக புராணங்கள் கூறுகின்றன.


சீதை, திரெளபதி, மண்டோதரி, தாரை , அகல்யா இந்த ஐவரும் பஞ்சப் பத்தினிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.


மகாபாரதத்தில் ஓரிடத்தில் ஒரு கதை வருகிறது.அர்ச்சுனனும் திரெளபதியும் ஒரு வனத்தில் உலவிக்கொண்டிருந்தனர். பேசிக்கொண்டே அவர்கள் ஒரு நெல்லி மரத்தடிக்குச் சென்றனர். அதனடியில் ஒருமுனிவர் கண்மூடி தவமிருந்தார். அந்த மரத்தில் ஒரு நெல்லிக்கனி பழுத்திருந்தது.


திரெளபதிக்கு அந்தக்கனியைப் பறித்து உண்ண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அர்ச்சுனனிடம் கூறினாள். அர்ச்சுனன் ஒரேநொடியில் அதைப் பறித்துத் தந்தான்.


அப்போது அங்கே வந்த முனிவர்கள் சிலர் திரெளபதியின் கையிலிருந்த நெல்லிக்கனியைப் பார்த்து பதறினர்.


“ அம்மா இந்த நெல்லிக்கனி சிவனின் அனுக்கிரகத்தால் உண்டாகியிருக்கிறது. இம்மரத்தினடியில் தவமிருந்து பனிரெண்டு

ஆண்டுகளுக்கு ஒருமுறை கண்திறக்கும் இந்தத் தவமுனிவரின் ஆகாரத்துக்கெனவே, இம்மரத்திலிருந்து ஒரே ஒரு காய் மட்டும் காய்த்து கனியாகி, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவரது கையில் விழும். அதைப் புசித்த அவர் மீண்டும் தவத்தில் ஆழ்ந்துவிடுவார்.


நாளை முனிவர் கண்விழிக்கும் நாள். அவரது சாபத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டியிருக்குமே என்று நாங்கள் அஞ்சுகிறோம்” என்றனர்.


‘தவறு செய்துவிட்டோமே’ என அர்ச்சுனன் கவலையடைந்தான்.


அர்ச்சுனன் திரெளபதியை அழைத்துக் கொண்டு, தர்மரிடம் சென்று நடந்ததைச் சொன்னான். சம்பவத்தை அறிந்த பாண்டவர்கள் அனைவரும் வருந்தினர்.


கிருஷ்ணனை எண்ணி துதித்தனர். உடனே வந்து சேர்ந்த அவர் , அனைவரையும் நெல்லி மரத்தடிக்கு அழைத்துப்போனார்.


‘உண்மையால் ஆவாதது ஒன்றும் இல்லை. உங்கள் மனதிற்குள் அந்தரங்கமாய் இருக்கும் ரகசியத்தை நீங்கள் ஒவ்வொருவராக வெளியிட்டால் இந்த கனி கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து சென்று மரத்தில் பழையபடி ஒட்டிக்கொள்ளும்’ என்றார் கிருஷ்ணர்.



‘தர்மமும், பொறுமையும், கிருஷ்ணனின் நினைவுமே என் மனத்துள் ஊறிக்கொண்டிருக்கின்றன. பாவமான காரியங்கள் என் மனத்துள் நுழைய நான் இடம் கொடுப்பதில்லை’ என்றார் தருமர்.


பழம் தரையை விட்டு இரண்டு முழம் உயர்ந்தது. ‘பிறர் மனைவியை சகோதரியாய் எண்ண வேண்டும். பிறர் பொருள்மீது ஆசைப்படக்கூடாது. பிறரை நிந்தித்து அவமதிக்கக் கூடாது. பிறர் துக்கத்தை தன் துக்கமாய் பாவிக்க வேண்டும் இவை எனக்கும் எப்போதும் இருக்கும் எண்ணங்கள்’ என்றான் பீமன். பழம் மேலும் இரண்டு முழம் உயர்ந்தது.


‘உயிரைவிட மானமே மேலானது. ஆதலால் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். மானமுடன் வாழ்வதுதான் உயர்ந்த குலத்திற்கான அடையாளம்’

இவை என் கருத்து என்றான் அர்ச்சுனன். பழம் மேலும் இரண்டு முழம் மேலேறியது.


‘ஞானமும், கல்வியும் இல்லாதவர்கள் வெறும் பதருக்குச் சமம் என்ற எண்ணம்தான் எனக்குள் இருக்கிறது’ என்றான் நகுலன். பழம் மேலும் இரண்டு முழம் உயர்ந்தது.


சத்யமே என்தாய், ஞானமே தந்தை, தர்மமே துணைவன், கருணையே சிநேகிதன், சாந்தமே மனைவி, பொறுமையே என் குழந்தை என்றான் சகாதேவன். பழம் மரத்தினை நெருங்கியது.


இறுதியாக திரெளபதி வந்தாள். எனக்கு எல்லாவற்றிலும் சிறந்த ஐந்து கணவர்கள், ஆனாலும் இன்னொரு ஆடவனால் என் மனம் ஈர்க்கப்படுகிறது. அது ஏன் என்பதுதான் என் உள்ளத்தில் புரியாத புதிராய் உறுத்திக்கொண்டிருக்கிறது’ என்றாள் திரெளபதி.


உடனே பழம் பழையபடி மரத்தில் ஒட்டிக்கொண்டது. பாண்டவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


வேதியா! திரெளபதி இவ்வாறு கூறிய பின்னும், ஐந்து ஆண்களைத் திருமணம் செய்து கொண்டிருக்கும் அவளை ஏன் பஞ்சபத்தினிகளில் ஒருத்தியாக வைத்து போற்றுகின்றனர் என்பது எனக்கு புரியாத புதிராக

இருக்கிறது.


இந்தக் கேள்விக்கான பதில் உனக்குத் தெரிந்திருந்தால் என் சந்தேகத்தை நிவர்த்தி செய். தெரிந்தும் சொல்லாமல் இருந்தால் தண்டனையை அனுபவித்துக்கொள், என்றபடி வேதியனைப் பார்த்தது வேதாளம்.


வேதாளமே! நூல் இழை பிசகினாலும் தவறாக புரிந்துக் கொள்ளப்படக்கூடிய கேள்வி , மக்கள் மனதில் சீற்றத்தை ஏற்படுத்திவிடக்கூடிய கேள்வியைக் கேட்டிருக்கிறாய். பொதுவாக நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் ஆராயக் கூடாது என்பார்கள்.


அதைப்போலத்தான் பாண்டவர்கள் ஐவரும் திரெளபதியை மணந்து கொண்ட சம்பவத்தைப் பற்றி, மாசுகற்பிப்பது போன்ற கேள்வியை எழுப்பக்கூடாது என்பது நாம் கடைபிடித்துவரும் ஒரு நியதி.


மகாபாரதத்தில் வரும் திரெளபதியின் பத்தினித் தன்மையைப் பற்றி கேள்விகள் எப்போதும் எழாது என்றும் கூறப்படுகிறது


ஆனாலும் மார்க்கண்டேய புராணத்தில் ஜைமினி முனிவர் மார்க்கண்டேயரிடத்தில் இதே கேள்வியைக் கேட்டதாகவும், மார்க்கண்டேயர் ஜைமினியை ‘விந்திய மலைச்சாரலில் ஒரு குகையில் வசித்துக் கொண்டு

சதா வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் நான்கு கருடப் பறவைகளிடம் கேளுங்கள்’ என்று அனுப்பி வைப்பதாகவும் கதை வருகிறது.


அந்த பறவைகள் ஜைமினியின் சந்தேகத்தை போக்குகின்றன.


ஒரு முறை, இந்திரலோக நாட்டிய மணிகளின் நாட்டியத்தில் கவனமாயிருந்த இந்திரன், அங்கே வந்த தேவகுரு பிரகஸ்பதியை கவனிக்காமல் அவமதித்துவிடுகிறான்.


பிரகஸ்பதி வெளியேறிவிடுகிறார். இதனால் தேவகுரு இல்லாமல் தேவர்களின் பலம் குன்றத் தொடங்கியது. எங்குத் தேடியும் தேவகுருவைக் கண்டுபிடிக்க இயலவில்லை. எனவே பிரம்மாவின் யோசனைப்படி துஷ்டா என்ற அசுரனின் மகன் விஸ்வரூபனைக் குருவாய் ஏற்று யாகங்களைச் செய்கின்றனர்.


ஆனாலும் அவிர்பாகத்தின் ஒருபகுதியை தன் இனமான அசுரர்களுக்கு அளித்துவிடுகிறான் விஸ்வரூபன். இதனால் கோபம் அடைந்த

இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால் விஸ்வரூபனைக் கொன்றுவிடுகிறான். இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்துக் கொள்கிறது.


இதனால் இந்திரனிடமிருந்த பெருமை எமதருமனிடமும், பலம் வாயுபகவானிடமும், தேஜஸ் அஸ்வினித் தேவர்களிடமும் சென்று சேர்ந்ததால் அவன் பலம் குன்றி விருத்தாசுரனுடன் நடந்த போரில்

தோற்றுப்போகிறான். அசுரர்களின் வலிமை அதிகமாகிறது. அதர்மங்கள் பெருகுகிறது. பிரம்மதேவரும் , பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிடுகின்றனர்.


அப்போது மகாவிஷ்ணு, ‘கவலைவேண்டாம் நான் பூலோகத்தில் கிருஷ்ணராய் அவதரிப்பேன், இந்திரன் பாண்டவர்களாய் அவதரிப்பார்,’ என்று கூறியருளினார்.



தேவேந்திரனிடமுள்ள பெருமை தருமராகவும், பலம் பீமனாயும், அவன் பாதியம்சம் அர்ச்சுனனாயும், அழகு நகுல சகாதேவர்களாகவும் அவதரித்தன.


பஞ்ச பாண்டவர்கள் பிறப்பால் ஐந்து பேராக இருந்தாலும் அவர்கள் தேவேந்திரனின் ஐந்து அம்சமும் அமையப் பெற்றவர்கள். எனவே பாண்டவர்கள் ஒருவரே, திரெளபதி மணந்து கொண்டது ஒருவரையே

என்று கருத வேண்டும். சந்தேகமின்றி அவள் பத்தினியே என்று சுக்ருதன் என்ற முனிவரின் புதல்வர்களான நான்கு பறவைகளும் ஜைமினியிடம் விளக்குவதாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. எனவே பாண்டவர்கள் ஐவராயினும் ஒருவராகவே கருதப்படுகின்றனர்.


அடுத்து நாம் திரெளபதி பிறப்பின் பின்னணியைப் பற்றிப் பார்ப்போம்.


பாஞ்சால தேசத்தின் மன்னன் துருபதனின் மகள். எந்தத் தாயின் வயிற்றிலும் பிறக்கவில்லை. எனவே அயோனிஜா என்றழைக்கப்படுகிறாள். துருபதன், துரோணரின் ஆணைப்படி பாண்டவ, கௌரவர்களால்

தோற்கடிக்கப்பட்டு, கட்டி இழுத்து வரப்பட்டு அவமானம் அடைந்தவர்.


துரோணரைப் பழிக்குப் பழிவாங்க அவர் துடித்தார். அதற்காக யஜா, உப யஜா என்ற முனிவர்களை வைத்து ஒரு யாகம் நிகழ்த்துகிறார். அந்த யாகத் தீயில் முதலில் வந்தவன் திருஷ்டத்யுமன். அடுத்து தோன்றியவள்

திரெளபதை. மிக அழகிய எழில் உடையவள். அவளுடைய உடலிலிருந்து கமழும் தாமரையின் மணம் இரண்டு மைல் தொலைவுவரை வீசுமாம். இவள் தோன்றும போது கௌரவர்கள் இவளால் அழிவார்கள் என்று அசரீரி கேட்டதாம். வேள்வியிலிருந்து தோன்றியதால் யக்ஞன சேனி என்றும் அழைக்கப்படுகிறாள்.


‘திரெளபதி சிறுவயது முதல் கிருஷ்ணனின் நெருங்கிய சிநேகிதியாய் இருந்து வந்தவள். கிருஷ்ணரை சகா என்றும் திரெளபதியை சகி என்றும் அழைப்பர்.

திரெளபதை முன் ஜென்மத்தில் இந்திர சேனா என்ற நளாயினியாகப் பிறந்தவள்.நளன் தமயந்தியின் மகளாவாள். அவள் கணவன் மகுடாலயா என்பவன் குஷ்டரோகி. ஆனாலும் ஒரு மனைவி செய்ய வேண்டிய

பணிவிடைகளையெல்லாம் கணவனுக்கு கண்ணுக்கும் கருத்துமாகச் செய்கிறாள். மகுடாலயா துறவியான காலக்கட்டத்தில் , ஒரு சமயம், நீ ஐந்து கணவனுடன் வாழ்வாய் என்று நளாயினியை சபித்துவிடுகிறான்.


நளாயினி சிவனை எண்ணி நெடுங்காலம தவமிருக்கிறாள். சிவன் அவள் முன் தோன்ற, தனக்கு மிகச் சிறந்த குணநலன்களை உடைய கணவன் அமைய வேண்டும் என்று கேட்கிறாள்.



அவள் கேட்கும் ஐந்துவித இயல்புகளும் அடங்கிய புருஷ இயல்பு- தேவேந்திரனுக்கு பொருத்தமாய் இருந்தது. ஆனால் அப்படி ஒரு ஆண்மகன் அமைவது அரிது என்பதால், நேர்மையில் சிறந்த நீதிமானான தர்மனையும்,

ஆயிரம் யானைகளின் வலிமையைக் கொண்ட பீமனையும், வீரத்திலும் யுத்தத்திலும் சிறந்து விளங்கக்கூடிய அர்ச்சுனனையும், அழகில்

மன்மதனையும் தோற்கடிக்கக்கூடிய நகுலன் சகாதேவனையும் திரெளபதியாய் பிறந்து மணமுடிக்குமாறு சிவன் அருளுகிறார்.


திரெளபதி, துருபதனின் மகனாய் வேள்வித்தீயில் அவதரிக்கிறாள். தெய்வ அம்சத்துடன் எந்த சூழ்நிலையிலும் தன் பத்தினித் தன்மை கெடாத

சிறப்புத் தன்மை கொண்டவளாய் சிவனின் அருளால் அவதரிக்கிறாள் என்றே புராணங்கள் திரெளபதியைப் பற்றி கூறுகின்றன.


திரெளபதியின் சுயம்வரத்தில் நடந்த போட்டியில், அந்தண வேடத்தில் வந்த அர்ச்சுனன் வெற்றி பெறுகிறான். திரெளபதியை அழைத்துக் கொண்டு, சகோதரர்களுடன் தன் தாயின் இருப்பிடம் செல்கின்றான். திரெளபதியை

வெளியில் நிறுத்திவிட்டு, ‘தாயே நான் ஒரு சிறந்த போட்டியில் வெற்றிபெற்று, அதற்குரிய பரிசை கொண்டுவந்திருக்கிறேன்’ என்று கூறுகிறான்.


‘ஐவரும் பகிர்ந்துகொள்ளுங்களப்பா’ என்கிறாள் குந்தி. திரெளபதியின் தந்தை துருபதனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வழிவழியாகடைபிடித்து வரும் வழக்கத்திற்கும், பண்பாட்டிற்கும் புறம்பான செயல், மனித குலத்தில் ஒரு தவறான வாழ்க்கை முறை நிலவுவதற்கு திரெளபதி ஒரு முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று கவலையுறுகிறான். அப்போது வியாச மகரிஷி அங்கு தோன்றி, திரெளபதியின் முன் ஜென்மத்தையும் சிவனிடம் பெற்ற வரத்தைப் பற்றியும் கூறி, பாண்டவர்களின் முன் வினைகளையும் கூறி, திரெளபதி பாண்டவர்கள் ஐவருக்கும் பத்தினியாக இருக்க வேண்டும் என்பது விதி. ஐவருக்கும் அவள் பத்தினியாய் இருக்க முடியும் என்பது ஈசனின் சித்தம். அதனால்தான் அவள் பிறப்பு வேள்வித்தீயில் நிகழ்ந்தது. பூமியில் திரெளபதிக்கு மட்டும் அத்தகைய தன்மை உண்டு. மற்ற பெண்கள் இதை உதாரணமாக எடுத்தக் கொள்ளக் கூடாது என்று விளக்கம் கூறுகிறார்.



இவ்வாறு பாண்டவர்கள் ஐவருக்கும் பத்தினியாக திரெளபதி திகழ்கிறாள்.


‘எப்படி ஐவரிடமும் தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது?’ என்ற தன் மனக்கஷ்டத்தை கண்ணனிடம் திரெளபதி கூறுகிறாள். அதற்கு ஒரு கணவனிடம் ஒரு வருடம் வாழும்படி கண்ணன் அவளுக்கு ஆலோசனைக்

கூறுகிறான். எனவே ஒவ்வொரு கணவனிடம் வாழும் காலங்களில் அவனை மட்டுமே கணவனாக மனதில் நிறுத்தி, அவனுக்கு மட்டுமே மனைவியாக

வாழ்ந்து வருகிறாள் திரெளபதி. எனவே ஐவருக்கும் பத்தினியாய் அவளை உலகம் ஏற்றுக்கொண்டது.


வேதாளமே! நீ கூறியகதையில் திரெளபதி கூறிய ரகசியம் பற்றி இப்போது பார்ப்போம். இன்னொரு ஆடவனை என் மனம் நாடுகிறது என்று திரெளபதி கூறியது கர்ணனைத்தான் என்பதே உண்மை.


ஏனெனில் திரெளபதியின் சுயம் வரத்தில் அந்தணனாய் வந்த அர்ச்சுனனுக்கு முன்பாக அந்த போட்டியில் பங்கேற்க வந்தவன் கர்ணன்.

கண்ணன் செய்த சாடையின்படி திரெளபதி அவனை ஏளனமாகப் பேசி வெளியேறச் செய்கிறாள். மற்ற எல்லா அரசர்களும் தோற்றபின் திருஷ்டயுத்மன் ‘அரசர்களைத் தவிர பிறரும் போட்டியில் பங்கேற்கலாம்’ என்று அறிவித்தபின் அந்தண உருவில் வந்த அர்ச்சுனன் போட்டியில் பங்கேற்று ஜெயிக்கிறான். கர்ணன் இந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தால் இப்போட்டியில் அர்ச்சுனனுக்கு முன் வென்றிருப்பது அவனாகத்தான் இருக்க முடியும். அப்படியானால்

திரெளபதியின் கணவனாக இருக்கக்கூடிய உரிமையை முதலில் பெற்றிருக்க வேண்டியவன் அவன்தான்.


அடுத்து பாரதப் போரில் ஒரு காட்சியில், தர்மனின் ஆணைப்படி, கர்ணனைக் கொல்ல அம்பெடுத்துக் கொண்டு அர்ச்சுனன் செல்கிறான் அவனுக்கு கர்ணனின் முகத்தோற்றம் தர்மனைப் போலவே தோன்றுகிறது.

உருவம் பீமனைப் போல் தோன்றுகிறது. கைகால்கள் நகுல சகாதேவனை ஞாபகப்படுத்துகின்றன. இதனால் கர்ணனை எதிர்த்து சண்டையிடாமல் திரும்பிவிடுகிறான்.


பதினெட்டாம் நாள் நடைபெற்ற போரில் அர்ச்சுனனின் அம்பினால் துளைக்கப்பெற்ற கர்ணன் தரையில் வீழ்ந்துகிடக்கிறன். அப்போது குந்தி அவன் தலையை தன் மடியில் கிடத்திக் கொண்டு என் மகனே, என்று

கதறுகிறாள். பாண்டவர்களும் கர்ணன் தங்களின் மூத்தவன் என்று எண்ணி கலங்கி அழுகின்றனர்.


அப்போது திரெளபதி நினைக்கிறாள். கர்ணன் பாண்டவர்களின் மூத்தவரா? இவரைப் பார்க்கும் போதெல்லாம் தர்மரைப் பார்ப்பதாகவே

எனக்குத் தோன்றியது இதனால்தானோ என்று எண்ணுகிறாள். திரெளபதியின் மனம் அவளையறியாமல் கர்ணன் மேல் சென்றதற்கும் இதுதான் காரணமாகும்.


சூரியப்புராணத்தில் சூரியனே பரம்பொருளாக சித்தரிக்கப்படுகிறார். அவரது மகன்தான் யமன், சனி, அசுவுனித் தேவர்கள் எல்லோரும். மற்றும் மும்மூர்த்திகளும் ஐம்பூதங்களும் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரும் சூரிய அம்சத்தினால் உருவாக்கப்பட்டவர்களாக சூரியப்புராணம் கூறுகிறது.



இந்தக் கோணத்தில் பார்த்தாலும் தேவேந்திரனின் அம்சமான பாண்டவர்களும், சூரியக் குமாரனான கர்ணனும் சூரியனின் அம்சமாக கருதப்படவேண்டியவர்கள். எனவே கர்ணனின் மேல் திரெளபதியின் மனம் நாடுவதற்கு காரணம் இருக்கிறது என்றே கருதத் தோன்றுகிறது.


சதி என்ற சக்தியே திரெளபதியாய் தொடர்ந்து அவதரித்து வந்தாள் என்று கூறப்படுகிறது. இந்து மக்களும் அவளைப் பத்தினித் தெய்வமாகப் போற்றி, திரெளபதி அம்மன் என்று பெயரிட்டு வணங்கி வருகின்றனர்.


வேதாளமே! திரெளபதியின் கற்பின் தன்மையை சோதித்துப் பார்ப்பது என்பது , அக்னியின் பிழம்பை எடுத்து, சுடுமா என்று தொட்டுப் பார்ப்பதற்கு சமமே ஆகும், என்பதே என் கருத்து. உன் கேள்விக்குரிய

பதிலும் இதிலேயே அடங்கிவிடுகிறது.


வேதியனின் மௌனம் கலைந்ததால், வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு , புளிய மரத்தைத் தேடிப் பறந்து போய் , ஒரு கொம்பைப் பற்றிக் கொண்டு தலைகீழாய் தொங்க ஆரம்பித்தது.




Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page