top of page

வேதாளமும் வேதியனும் பாகம் 7

புத்தர் செய்தது சரியா?


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளியமரத்தில்

தொங்கிக் கொண்டிருந்த பிரேதத்தைக் கீழேத் தள்ளி அதை எடுத்து

தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.


வேதியா! உலகில் மனித வாழ்க்கை என்பது பெரும்பாலும்

இன்பத்தை தேடும் பயணமாகவே அமைகிறது. எது நமக்கு இந்த உலக

வாழ்க்கையில் இன்பத்தைத் தருகிறதோ அதைத் தேடியலைவதும், அது

கிடைக்கவில்லையென்றால் வருத்தப்படுவதும் மனிதனின் இயல்பு.


மேலும், தான், தன் சுகம் என்பதில் மனிதன் எப்போதும் தெளிவாக

இருக்கிறான். பொதுநலத்தைப் புறந்ததள்ளுவதே மனிதனின் வழக்கமாக

இருக்கிறது.


ஜனனம், மரணம், கடவுள் போன்ற விசயங்களில் மனிதன் ஆழமாக

இறங்குவது உடல் சற்று தளரும் போதுதான். சாவை நெருங்குகிறோம்

என்கிற போதுதான், எதையாவது புண்ணியத்தைத் தேடிக்கொள்ளலாம்

என ஆன்மிகம் பக்கம் கவனம் திரும்புகிறது. அதுவரை இன்பத்தின்

தேடல்தான்.


இந்த உலகில் இன்பத்தை வேணடாம் என்று உதறித்

தள்ளிவிட்டுபோகிறவர்கள் யாரும் இருக்கிறார்களா? வரலாற்றில் தேடிப்

பார்த்தால் அப்படிச் செய்தவர்கள் அரிதாகவே இருப்பார்கள்.


யாரேனும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து, அதையெல்லாம் துச்சமென

மதித்து துறந்துவிட்டு செல்வார்களா?


பதவியையும், பணத்தையும், சுகத்தையும் தேடியலையும்

இப்பூமியில், தன்னிடம் இவையெல்லாம் இருந்தும், வேண்டாம் என்று

உதறிவிட்டுப் போகிறவனுக்குப் பைத்தியக்காரன் என்றுதான் பட்டம்

சூட்டுவார்கள்.


சகல சௌகரியங்களும் நிறைந்த சுகபோகவாழ்க்கையை வேண்டாம்

என உதறிவிட்டு, நள்ளிரவில் நாட்டைவிட்டு ஓடிப் போன ஒருவரைப்பற்றியக்

கதையை இன்றுனக்கு நான் சொல்லப்போகிறேன். அதைக் கேட்டுக்

கொண்டே வா. அவன் பித்தனா இல்லை புத்தனா? என்பதை நீ எனக்குச்

சொல்! சரியா?.


இன்றைக்கு சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பு, இமயமலைச் சாரலில் அமைந்திருந்த கபிலவாஸ்து என்ற நகரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்தார் சுத்தோதனர் என்ற அரசர். அவரது மனைவியின் பெயர் மாயாதேவி.


நீண்ட நாட்களாக அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லை. அரசனின்

வயதோ ஐம்பதைத் தாண்டிவிட்டது. செய்யாத வழிபாடுகள் இல்லை.

தனக்குப்பிறகு தனது நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என்று

அரசனுக்கு வருத்தம். அரசனின் வருத்தம் கலைவது போல் தான் கருத்தரித்த

நற்செய்தியைத் சொன்னாள் மாயாதேவி. அரசன் மிகவும் மகிழ்ந்தான்.

குழந்தை வயிற்றிலிருக்கும் போதே , பல நல்ல கனவுகளைக் கண்டுவந்தாள் மாயா. ஒரு வெள்ளையானை வந்து தன் வயிற்றில்

மாலை போடுவது போல் ஓர் அதிகாலையில் கனவு கண்டாள். தன் வயிற்றிலிருப்பது ஒரு தெய்வக் குழந்தை என்பதை உணர்ந்தாள்.


குழந்தையின் பேறுகாலம் நெருங்கிய காலத்தில் தனது பெற்றோர்

வசிக்கும் தேவதாதா என்ற நகரை நோக்கிச் செல்லும்போது வழியில் லும்பினி என்ற அழகிய சிற்றூரில் மாயா தங்குகிறாள். வீட்டின் வெளியேயிருந்த தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தபோது சால் மரத்தின் நிழலில் அழகிய ஆண் குழந்தையை ஈன்றெடுத்தாள்.



பிறந்த ஐந்தாவது நாளில் தன் ஆண்குழந்தைக்கு பெயர் சூட்டும்

வைபவத்தை வைத்திருந்தார் சுத்தோதனர். குழந்தை எல்ல

சுபநிமித்தங்களையும் கொண்டு பிறந்ததால் அவனுக்கு சித்தார்த்தன் என்ற

பெயரை வைக்கும்படி பண்டிதர்கள் பரிந்துரைத்தனர்.


குழந்தையின் பெயர் சூட்டுவிழாவிற்கு நாடெங்கிலுமிருந்து பல்வேறு

பண்டிதர்களும் யோகிகளும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அசிதாரஷி.

இமயமலைப் பகுதியில் தியானம் செய்து கொண்டிருந்த ஞானி. பண்டிதர்.

சகல கலைகளையும் அறிந்தவர். அவர் குழந்தையைப் பார்த்துவிட்டு,


“அரசே! உங்கள் குழந்தை மகாஞானிக்குரிய முப்பத்தெட்டு

லட்சணங்களையும் , எண்பது நல்லம்சங்களையும் கொண்டு திகழ்கிறான்.

இவன் மாபெரும் பேரரசனாக வேண்டும் அல்லது மகாஞானியாகவேண்டும்

ஆனால் இவன் ஒரு அரசனுக்குரிய கடமைகளைச் செய்வான் என்பதை

என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நாட்டை விட்டு வெளியேறி

மிகப்பெரிய ஞானியாவான் என்பதாகவேத் தோன்றுகிறது”. என்றுத்

தெரிவித்தார்.


சுத்தோதனர் திடுக்கிட்டார். தனக்கோ வயதாகிவிட்டது, தனக்குப்

பிறகு இந்நாட்டை ஆட்சி செய்ய வாரிசு பிறந்து விட்டான் என்று

மகிழ்ந்திருந்தோமே, அந்த மகிழ்ச்சியும் நீடிக்காது போலிருக்கிறதே என்று

வருந்தினார்.


சித்தார்த்தன் பிறந்த ஏழாவது நாளில் அவனது தாய் மாயா இறந்து

விடுகிறார். இதனால் தாயின் தங்கை பிரஜாபதி என்பவரால்

வளர்க்கப்படுகிறார் சித்தார்த்தர்.


தன் மகனுக்கு எந்த சூழ்நிலையிலும் துறவு ஞாபகம் வந்துவிடக்

கூடாதென்பதற்காக, அரண்மனையிலேயே எல்லா சௌகரியங்களையும்

செய்து கொடுத்து வளர்த்தார். அவனுடன் விளையாட நண்பர்கள்

அரண்மனைக்குள் வரவழைக்கப்பட்டார்கள். உதேயன் என்பவன்

சித்தராத்தனுக்கு நெருக்கமான நண்பனானான்.


சித்தார்த்தனுக்கு இலக்கியங்களைப் போதிக்க விஸ்வாமித்திரர் என்ற

அறிஞரையும், போர்க்கலைகளைப் போதிக்க சாந்திதேவர் என்பவரையும்,

இன்னும் மற்ற கலைகளில் சிறந்தவர்களாக இருப்பவர்களை ஆசிரியராக

நியமித்தார் அரசர்.

எல்லாக் கலைகளையும் கற்றுத்தேர்ந்து, கல்வி கேள்விகளில் சிறந்து

விளங்கியதோடு, 14 வயதில் ஒரு யானையை எதிர்த்து அடக்குவதில்

வல்லவனாக திகழ்ந்தார் சித்தார்த்தர்.


15 வயதில் சித்தார்த்தருக்கு இளவரசு பட்டம் சூட்டும் வைபவம் கோலாகலமாய் நடைபெற்றது.

ஒரு முறை சித்தார்த்தர் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேர்ந்தது. கோடைகாலமாக வெயில் கொளுத்தியதால் ஆல மர நிழலில் இளைப்பார அவர்களது சிவிகை நிறுத்தப்பட்டது.


அப்போது அந்தக் கொளுத்தும் வெய்யிலில் ஒரு விவசாயி

வேர்வை வழிந்தோட ஏர் ஓட்டிக்கொண்டிருந்தான். களைத்துப்போன

மாடுகளை சாட்டையால் அடித்து ஓட்டிக்கொண்டிருந்தான். இந்தக் காட்சி

சித்தார்த்தரின் மனதில் வருத்தத்தை மூட்டியது. அரண்மனையில்

அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க , வெளியில் இன்னொரு வாழ்க்கை

இப்படி துன்பமயாய் இருக்கிறதே என்ற சிந்தனை அவருக்குள் ஓடியது.

மனிதனும் விலங்கும் வெயிலில் கஷ்டப்பட, மண்ணிலிருந்து வெளியேறும்

புழுப்பூச்சிகளை பறவைகள் கொத்தித் தின்ன, பறவைகளை வேடர்கள்

கன்னி வைத்துப் பிடிக்க, இந்த வெளிஉலகில் எல்லோரும்

துன்புறுகிறார்களோ என்று சித்தார்த்தருக்குத் தோன்றியது.


மகனின் மனவோட்டத்தை புரிந்து கொண்ட சுத்தோதனன், மகனின்

சிந்தனை வெளியுலக வாழ்க்கையை நோக்கிப் போய்விடக்கூடாது என்று

நினைத்து, அவன் மனம் இன்பத்தை நாடட்டும் என இரண்டு அழகிய

இளம் பெண்களை , சித்தார்த்தனோடு பழகுவதற்கு ஏற்பாடுசெய்தார்.


ஆனால் அழகிய பெண்கள் மீதோ, சுகபோக வாழ்க்கையின் மீதோ

அவரது கவனம் செல்லவில்லை.


மகன் வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக கட்டுக் காவலை

அதிகப்படுத்தினார் அரசர்.


சித்தார்த்தனுக்கு 16 வயது நிரம்பியபோது, அதே வயதுடைய ,

அண்டை நாட்டின் இளவரசியான யசோதராஎன்னும் அழகியோடு

சித்தார்த்தருக்கு திருமணம் செய்து வைத்தார்.


இவர்களுக்கு ராகுலன் என்னும் மகன் பிறந்தான். தன் மகனுக்கு

குடும்பம் மனைவி, குழந்தை என்ற பந்தம் ஏற்பட்டுவிட்டது. இனி அவன்

இந்த வாழ்க்கையைத் துறக்க மாட்டான் என் நிம்மதியடைந்தார் சுத்தோதனன்.


ஆனாலும் ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தன்

மெய்க்காப்பாளனோடு அரண்மனையை விட்டு வெளியேறி, யாரும்

அறியாமல் நகருக்குள் சுற்றி வந்தான் சித்தார்த்தன்.

வழியில் ஓரு சவ ஊர்வலத்தையும், ஒரு தொழுநோயால்

அவதிப்படும் ஒரு பிச்சைக்காரனையும், தோல் சுருங்கி தள்ளாடி கையில்

கோலூன்றி நடந்த ஒரு வயதான கிழவனையும் பார்த்து திகைத்தான்.


சித்தார்த்தனின் மெய்க்காப்பளன் சாந்தகன், தனக்கு புரிந்த வரையில் மனிதர் வாழ்க்கை நிலையைப் பற்றி எடுத்துரைத்தான்.


இதுபோன்ற விசயங்களெல்லாம் தனக்குத் தெரியக்கூடாதென்பதற்காகவே தந்தை தன்னை அரண்மனைக்குள்ளேயே

வளர்த்து வந்திருக்கிறார் என்பதை சித்தார்த்தனால் உணர்ந்து கொள்ள

முடிந்தது.


தந்தையின் ஆசையை தன்னால் நிறைவேற்ற முடியாது என்பது

சித்தார்த்தனுக்கு விளங்கியது. ஒருநாள் நள்ளிரவு. அரண்மனைக் காவலர்கள்

அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். யசோதரை தன் மகன்

ரகுலனை அருகில் படுக்க வைத்திருந்தாள். இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில்

இருந்தனர். ஓசைப்படாமல் எழுந்தான் சித்தார்த்தன். மெதுவாக

அரண்மனையை விட்டு வெளியேறினான். மெய்க்காப்பாளன் சாந்தகன்

கடகம் என்ற குதிரையோடு காத்திருந்தான். இருவரும் கபில வாஸ்துவின்

எல்லையை விட்டு வெளியேறினர். வெகுதூரம் சென்ற பின். பார்கவ

முனிவர் ஆசிரமம் இருக்கும் காட்டை நெருங்கினர். அங்கிருந்த நீர்

நிலையில் குளித்த சித்தார்த்தன் தன் சிகையை மழித்துக் கொண்டான்.


தன் உடையையும் ஆபரணங்களையும் கழற்றி , யசோத¬ரையிடம்

ஒப்படைத்துவிடு’ என்று சொல்லிக் கொடுத்தான். கழுத்தில் அணிந்திருந்த

ஆபரணத்தை வளர்ப்புத் தாயிடம் தந்துவிடுமாறு பணித்தான். ‘இந்த

உலக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்திற்கெல்லாம் காரணம்



என்னவென்பதை அறியாமல் நான் திரும்ப மாட்டேன்’ என்று கூறிய

சித்தார்த்தன் நாட்டை விட்டு வெளியேறும் பாதையில் நடக்க ஆரம்பித்தான்.


சித்தார்த்தர் தன் பார்வையை விட்டு மறையும் வரையில் , கண்களில்

வழிந்தோடும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த சாந்தன்,

கபிலவாஸ்துவை நோக்கிச் செல்லும் பாதையில் தன் புரவியைச் செலுத்த

ஆரம்பித்தான்.


வேதியா! இந்தக் கதை எல்லோரும் அறிந்த கதைதான். இருந்தாலும்

எனக்கு நெடுநாளாய் ஒரு சந்தேகம். சந்தோஷமாய் வாழும் இளவயதில்,

தன் கணவன் மீது நம்பிக்கைக்கொண்டு நிம்மதியாய்

உறங்கிக்கொண்டிருந்த, தன் அழகு மனைவியை மறந்து, தன்னை தன்

தந்தை வளர்த்து ஆளாக்கியது போல தன் மகனை வளர்த்து

ஆளாக்கவேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதையும் மறந்து,

வயதான காலத்தில் தனக்கு பக்கபலமாய் தன் மகன் இருக்கிறான் என்று

தன்னையே நம்பியிருந்த தன் தந்தையையும், நாட்டு மக்களையும்

விட்டுப்பிரிந்து சித்தார்த்தன் நாட்டைவிட்டுப் போனது சரியா? போகாமலேயே தன் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டே, இந்த வாழ்க்கையின் துன்பத்திற்கான காரணத்தை தேடியிருக்கக் கூடாதா? அப்படிச் செய்வதன் மூலம் தன் கடமையையும் நிறைவேற்றி, தான் நினைத்ததையும் அடைந்திருக்கலாம் தானே? ஏன் அப்படிச் செய்யவில்லை?.


வேதியா! என் கேள்விக்குரிய சரியான பதிலை உன்னிடம்

எதிர்பார்க்கிறேன் சொல்வாயா?


வேதாளமே! சித்தார்த்தன் எப்படி கௌதம புத்தனாய்

மாற்றமடைந்தார் என்ற கதை, உலகம் முழுதும் அறிந்த கதைதான்.


இதேக் கேள்வியை யசோதரை புத்தரைக் கேட்பதைப்போல் ஒரு

எழுத்தாளர் எழுதியிருந்ததை படித்த ஞாபகம்..


“எதையோ நீங்கள் அடைந்துவிட்டதாக எல்லோரும்

சொல்கிறார்களே? அதை இங்கிருந்தே அடைந்திருக்கக்கூடாதா? அப்படி

எங்களையெல்லாம் பரிதவிக்க விட்டுப் பிரிந்துதான் அதை அடைய

வேண்டுமென்றால் அப்படி என்ன அது எங்களை விட உயர்த்தியாய்

இருக்க முடியும்?” என்பதாய் ஒரு கேள்வி கேட்கிறாள். புத்தர் மௌனம்

சாதிப்பதாய் கதை பேசியிருந்திருந்தது.


இதைப் போலவே கவிப்பேரரசு வைரமுத்து தன் கவிதை ஒன்றில்

யசோதரையின் குரலாக கேள்வி ஒன்றை எழுப்பியிருப்பார்.


“விழித்துப் பார்த்த யசோதரா அருகில் சித்தார்த்தர் இல்லாததைப்

பார்த்து உண்மை உணர்ந்து புலம்புகிறாள்..



ராஜபிரபு நீவிர் துறந்தது சிற்றின்பம் பெற விழைவதோ பேரின்பம் இழந்தது கையகல அரசு ஈட்டவிருப்பதோ பிரபஞ்சம் கழற்றியது மகுடம்

அணிவது ஒளிவட்டம் இழப்பதை விட பெறுவது பெரிதெனில்

துறவென்ன துறவு சுத்தோதன மைந்த..? உனது உலகம் நிறைவை நோக்கி

எனது உலகம் வெறுமை நோக்க எண்ணித் துணிந்தீரா என் நிலைமை?அரசிருந்தும் அகதியாய்.. பூவிருந்தும் விதவையாய்.. பிள்ளையிருந்தும் சந்நியாசினியாய். துறவி நீரல்ல ராஜகுமாரா..யசோதரா யசோதரா”


சரி, இப்போது நாம் பேசலாம். மனிதக் குலத்தின் பயணப் பாதையை இருள் வந்து சூழும் நேரமெல்லாம் ஒரு மகாகவி தோன்றி தீப்பந்தம் ஏந்தும் வேலையைச் செய்கிறான் என்று கவிப்பேரரசு தன் கவிதை ஒன்றில் பாடியிருக்கிறார்.


அதைப் போலவே மனிதகுலம் அல்லலுறும் போதெல்லாம் ஒரு மகாஞானி,

அவதாரப்புருஷன் அவதரித்து, அவர்களின் துயரை துடைத்து, அவர்களை

நல்வழியில் நடத்திச் செல்கிறார் என்பதும் உண்மை.


‘சம்பவாமி யுகே யுகே’ என்று கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் கூறியது

போல், மனித குலத்தை வழிநடத்தத் தோன்றிய அவதாரப் புருஷர் புத்தர்.

மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.


அன்பு மறைந்து, மக்களிடம் சுயநலம் மிகுந்து, வேதங்கள்,

உபநிடதங்கள் போன்ற வேத நூல்களின் உண்மைக் கருத்துக்களை

இருட்டடைப்புச் செய்து, போலியான மதப் பிரசாரங்கள், சடங்குகள்

தோன்றி, மக்களை இனம் பிரித்து , ஏற்றத் தாழ்வுகளை கற்பித்து, அதுதான்

உண்மை, அது உன் தலையெழுத்து அனுபவி என்று அவர்களின்

உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த காலக்கட்டத்தில் அவதரித்தவர் புத்தர்.


மக்களிடையே நிலவிய இதுபோன்ற ஏற்றத் தாழ்வுகள் ,மற்றும்

மனிதனின் நோய், மூப்பு, மரணம் போன்றவற்றிற்கு காரணம் என்ன?

என்பது போன்ற சந்தேகங்களுக்கு விடைகாண வேண்டும் என்ற

நோக்கத்தோடு அரண்மனையை விட்டு வெளியேறியவர் புத்தர்.


இந்த உண்மையைத் தேடி , இவற்றிற்கெல்லாம் காரணமாயிருக்கிற

சக்தியைத்தேடி, அலைந்த மகான்கள் எத்தனையோ பேர். விவேகானந்தர்,

யோகானந்தர், ரமணமகரிஷி, யோகி ராம்சுரத்குமார் போன்றோர்களின்

வாழ்க்கையிலும் இந்தத் தேடலுக்கு அலைந்த அவர்களின் அனுபவத்தை

நாம் அறியலாம்.


இல்லற வாழ்க்கை, சுகபோக வாழ்க்கைஎன்பது, இந்தத் தேடுதலுக்கு

தடையாயிருக்கும் என்று நினைத்தே சித்தார்த்தர் அரண்மனையை விட்டு

வெளியேறினார். அரண்மனையிலேயே வசித்திருந்தால் புத்தராய் அவர்

மலர்ந்திருக்க முடியுமா என்ற கேள்வி எழும்போது, முடியாது என்ற

பதில்தான் நம் மனதில் முன்னிற்கிறது.


புத்தர் உடலைவருத்தி, மனதை நிலை நிறுத்தி தவமிருந்து,

கயாஎனுமிடத்தில் போதிமரத்தினடியில் ஞான நிலையை அடைகிறார்.

பிரகாசமான பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிப் போகிறார்.


மனிதவாழ்க்கை, பிரபஞ்சம் தொடர்பான உண்மைகளை அந்தகணம்

அவரால் அறிந்துகொள்ள முடிந்தது.


பிறப்பு. மூப்பு, நோய், இறப்பு, என்கிற மாற்றமுடியாத நிஜங்களை

வெற்றிபெற, ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை அடைவதே அந்த

மாற்றமுடியாத நிஜங்களிலிருந்து விடுபடும் வழி என்பதை உணர்கிறார்.



வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாகஏற்றுக் கொள்ளும்

மனப்பக்குவம் வரும்போது ஒருவன் மரணத்தை வென்றுவிடுகிறான் எனத்

தெளிந்தார்.


அன்பு ஒன்றே புத்தரின் முக்கிய பாதையாய் இருந்தது.

இதயத்தின் அமைதியே இந்த உலகத்தில் அமைதியை ஏற்படுத்தக்கூடியது.

தன்னை வெல்வதே சிறந்த வெற்றி என்றார்.


நல்லதைச் செய். யாரையும் துன்புறுத்தாதே. போரைத்தவிர்த்திடு.

புலாலைத்தவிர்த்திடு. எளிமையாக வாழ். அடுத்தவர் பொருளுக்கு

ஆசைப்படாமல் வாழ். உனது வாழ்க்கை உன் குடும்பத்தவர்க்கும், நீ

வாழும் சமூகத்துக்கும் , உலகத்துக்கும் பயனளிப்பதாய் இருக்கட்டும்


துன்பத்திலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கு புத்தர் சொல்லும்

போதனைகள் இவை.


வேதாளமே! புத்தர் உலகைத் துறந்தார்; அரசைத் துறந்தார்; தான்

மிகவும் நேசித்த மனைவியைத் துறந்தார்; பிறந்த குழந்தைக்கும் செய்ய

வேண்டிய கடமையைச் செய்யவில்லை; தன் வயதான தந்தையிடம் மனிதத்

தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்பதையும் உணர்ந்தார்.அவர்

ஞானம் பெற்றதும் செய்ய நினைத்த முதல் காரியம் நாடு திரும்பி அதற்கான

வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.


புத்தர் கபிலவாஸ்து புறப்படுகிறார். உடன் ஆனந்தன் வருகிறான்.

ஆனந்தன் புத்தரிடம் தீட்சை பெற்றவன். உறவில் அண்ணன் முறை.

தீட்சை பெறுமுன் புத்தரிடம் மூன்று வாக்குறுதிகளைப் பெறுகிறான். அதில்

ஒன்று எந்த சூழ்நிலையிலும் புத்தரை விட்டு பிரியக்கூடாது என்பது.


எனவே இருவரும் கபிலவாஸ்துவை அடைகிறார்கள்.


புத்தர் ஆனந்தனிடம் கூறுகிறார். ஆனந்தா, எப்போதும் என்னுடன்

இருக்கும் உரிமை உனக்கு இருக்கிறது. நான் முன்பு மிகவும் நேசித்ததாய்

கருதிய பெண்ணை இப்போது சந்திக்க வந்திருக்கிறேன். சொல்லாமல்

போனதினால் அவளுக்கு என்மேல் கோபம் இருக்கும். அவள் அரச குலத்துப்

பெண். பிறர் முன்னிலையில் கோபத்தைக் காட்டுவது பண்பாடு அல்ல

என்பதால் அவளால் எதுவும் கூற இயலாது. அவள் தனது கோபத்தையும்

, மனச்சுமைகளையும் இறக்க நீ உதவ வேண்டும். கொஞ்சம் தள்ளி

தூரமாய் நின்றால் போதும். நான் அரண்மனைக்கு வெளியில் அவளைச்

சந்தித்து ¢விடுகிறேன். பிறகு உன் இஷ்டம் என்கிறார். சரி என்று

விலகுகிறான் ஆனந்தன்.


யசோதரை கோபமாகத்தான் இருந்தாள். சிறிது நேரம் மௌனம்

காத்து பேசத்தொடங்கினாள்.



“நீங்கள் உலகைத் துறந்ததால் எனக்குக் கோபம் வரவில்லை.

என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருந்தால் மறுப்பு சொல்லியிருக்க மாட்டேன்.

நீங்கள் என்னை நம்பவில்லை. நீங்கள் உண்மையாக என்னை

நேசிக்கவில்லை. அதனால் என்னை அவமதித்தீர். இப்போதும் சொல்கிறேன்,

நீங்கள் வெளியேறி விட்டுச் சென்றதால் கோபம் இல்லை. என்னிடம்

சொல்லாமல் போனதற்காகவே கோபம்” என்றாள்.


‘உன்னிடம் மன்னிப்புக் கேட்கவே வந்திருக்கிறேன்’ என்றார் புத்தர்.


கண்களில் கண்ணீர் ததும்ப அவள் அவரைப் பார்த்தாள். ‘அன்று

வெளியேறிய சித்தார்த்தர் அவர் இல்லை என்பதை உணர்ந்தாள். ‘என்ன

ஒரு சாந்தம். என்ன ஒரு கருணை. எப்படிப்பட்ட கண்கள். அமைதியான

தோற்றம். இவர் மாறிவிட்டார். இவரது இருப்பே ஒளிமயமாய் இருக்கிறது.

மன அமைதியைத் தருகிறது. கோபம் என்று சொன்னேன், இப்போது

இவரைக் கோபித்துக் கொள்ள முடியவில்லை.


இந்த அரண்மனைச் சுகபோக வாழ்க்கையையும், எங்களையும்

விட்டு வெளியேறியிருக்காவிட்டால் இப்படி மகாஞானியாய், எல்லோருக்கும்

நல்வழிகாட்டக்கூடிய தன்மையை அடைந்திருப்பாரா?’ என்றொரு கேள்வி

முதன் முதலாய் யசோதரையின் இதயத்தைத் துளைக்கிறது.


புத்தர் புன்முறுவல் பூத்தார்.


யசோதரை ராகுலனை அழைத்தாள். மகனே! இதோ இவர்தான்

உன்னைப் பெற்ற தந்தை. இவர் உனக்கு என்ன செய்யப் போகிறார்.

இவர் உனக்கு ஆற்ற வேண்டிய கடமை என்ன? கேட்டுப் பெற்றுக் கொள்

என்றாள்.


புத்தர், தமது பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்து ,

இதுதான் நான் கொடுக்கும் சொத்து, என்று கூறி அவனுக்கு தீட்சை

அளிக்கிறார். எனக்கும் தீட்சை அளியுங்கள் என்கிறாள் யசோதா.


‘உங்கள் இருவரையும் என் கருணைக்குள் இணைத்துக்

கொள்கிறேன். என்னிடம் கொடுப்பதற்கு வேறு எதுவும் இல்லை.என் முழு

அனுபவத்தையும் வழங்குகிறேன்’ என்றார் புத்தர்.


வேதாளமே! அன்று ஒரு சித்தார்த்தன் அரண்மனையைவிட்டு

வெளியேறியிருக்காவிட்டால், இப்படி ஒரு புத்தனை உலகம் அறிந்திருக்க

முடியாது.


ஒரு குடும்பத்தின் தலைவன் வெளியேறி, உலகத்தின் தலைவனாய்

திரும்பி வந்தான். தனிப்பட்ட முறையில் யசோதரையின் மனத்துயருக்கு

மருந்தில்லைதான், அதற்காகத்தான் புத்தர் அவளிடம் மன்னிப்புக் கேட்க

வந்திருக்கிறேன் என்கிறார்.



இந்த உலகம் மிகப்பெரிய நன்மையை பெற வேண்டுமானால் இப்படி

ஒரு சில ஜீவன்கள் சில சுகங்களைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.

பொதுநலத்திற்காக, சுயநலத்தை கைவிட வேண்டியிருக்கிறது.


ஒரு உன்னத மனிதன் உலகத்துக்காக தன் குடும்பத்தைத் துறந்துச் சென்றான். அந்தப் பிரிவு அவன் பக்குவம் பெறத் தேவைப்பட்டது.

நாட்டுக்காக நடைபெறும் போரில் தங்கள் இன்னுயிரை துறக்கின்றனர்

எத்தனையோ வீரர்கள். அவர்கள் குடும்பம், குடும்பத் தலைவனை

இழக்கிறது. ஆனாலும் நாடும், அரசனும், மக்களும் காப்பாற்றப்படுகிறார்கள். இதுதான் வரலாறு.


காலங்கள் பல கடந்த பின்னும் உலகம் புத்தரை மகாபுருஷனாய்

மதித்துப்போற்றி வருகிறது. அன்பின் திருவுருவாய் அவரை வணங்குகிறது.

அவர் செயலில் எள்ளளவும் களங்கம் கற்பித்து தூற்றவில்லை.


உலக மக்களின் துன்பங்களையெல்லாம் களைய வேண்டும் என்கிற

உயரிய எண்ணத்தில் சித்தார்த்தர் குடும்பத்தை விட்டு, உண்மையைத்

தேடிப் போன செயலில் தவறேதும் என்னால் கூறமுடியவில்லை. அவரது

நிலையில் அவர் செய்தது சரியே! இதுவே உன் கேள்விக்கான என்

பதில். வேதியன் கூறி முடிக்கிறான்.


வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லியதன் மூலம்

வேதியனின் மௌனம் கலைந்ததால் வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு

மீண்டு¢ம் புளிய மரத்திற்குச் சென்று, கிளையொன்றைப் பற்றிக்கொண்டு

தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.





Σχόλια


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page