top of page

வேதாளமும் வேதியனும் பாகம் 6

Updated: Jun 5, 2022

குரு தட்சணை கேட்க துரோணருக்கு

தகுதி உண்டா ?


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய மரத்தில்

தொங்கிக் கொண்டிருந்த பிரேதத்தைக் கீழேத் தள்ளி அதை எடுத்து

தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.


வேதியா! இவ்வுலகில் சாதனைப்படைத்தவர்களின் வாழ்க்கையை

பார்த்தாய் எனில் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் முயற்சியில்,

சலிக்காத மனம் படைத்தவர்களாகவே இருப்பார்கள்.


சரித்திரத்தில் அப்படி ஒன்றும் பெரிதாய் பேசப்படாதவனும், சாதிக்க

துடித்தவனும், சலிக்காத மனமுடையவனுமாக இருந்த ஒரு வேடனின்

கதையை உனக்குச் சொல்கிறேன் கேட்டுக் கொண்டே வா. எனக்கும்

பொழுது போகும், உனக்கும் நடைக் களைப்புத் தெரியாது.


பதின்ம வயதில் இருக்கும் சிறுவன் அவன். அஸ்தினாபுரத்திற்குச்

சற்றுத் தொலைவில் இயற்கை அரணாய் அமைந்திருந்த பெரும் மலைக்

காட்டுக்குள் வசிப்பவன். நிஷாதர்கள் என்றழைக்கப்பட்ட, வேடர் கூட்டத்தின்

தலைவனான ஹிரண்யதனுஸ் என்பவனின் மகன். அவன் பெயர் ஏகலைவன்.


வேடர்குலத்தில் பிறந்ததினாலோ என்னவோ இயற்கையிலேயே

வேட்டையாடும் திறன் அவனுக்கு இருந்தது. தன் வயதை ஒத்த பையன்கள்

எல்லோரும் பறவையையும் முயலையும் வேட்டையாடுவதில் மும்முரம்

காட்டும் போது சிறுத்தையை வேட்டையாடி, கொண்டு வந்து தன்

கூட்டத்தினரை ஆச்சரியப்படுத்துவான். வேடர்களெல்லாம் அவனைப்

பெரிதும் மதித்துப் போற்றினர். தனது மகனது திறமையை வேடுவர்

அனைவரும் போற்றுவதைக் கேட்டு ஏகலைவனின் தாய் தந்தைக்குப்

பெருமை.


ஏகலைவனுக்கும் ஒரு லட்சியம் இருந்தது. தனுர்வேதம் கற்று

வில்வித்தையில் மிகச் சிறந்த வீரனென்று பெயரெடுக்க வேண்டும் என்பதே

அது. சிறுவயதாய் இருக்கும் போது அவனது தாத்தா அவனுக்கு ஸ்ரீஇராமரின்

கதையைச் சொல்வதுண்டு. ஸ்ரீஇராமர் லட்சுமணர்களின் வில்திறனைக்

கேள்விப்பட்டதிலிருந்து தானும் வில்வித்தைகளைக் கற்றுக் கொள்ள

வேண்டும், அவர்களைப் போலவே அஸ்திரப் பயிற்சிகளையும் அறிந்து

கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் அதிகரித்துக்

கொண்டேயிருந்தது.


இந்த சமயத்தில் அஸ்தினாபுரத்துக்கு கொம்புத் தேன் விற்கச் சென்ற

மாயன் வந்து சொன்னத் தகவல் அவனுக்கு நம்பிக்கைத் தருவதாய்

அமைந்தது.


பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வில் வித்தை கற்றுத் தர,

துரோணாச்சாரியார் என்பவர் வந்திருக்கிறார், பரத்வாஜரின் புதல்வர்.

பீஷ்மருக்கு வில்வித்தைக் கற்றுத் தந்த பரசுராமரிடம் பயின்றவராம்.

வில்வித்தையில் மிகச் சிறந்த கெட்டிக்காரர் என்கிறார்கள். நகருக்குப் புறத்தே அவரது ஆசிரமம் அமைந்திருக்கிறது என்று மாயன் சொன்னதும், அவரிடம் சென்று விற்பயிற்சியை மேற்கொள்வது என்று ஏகலைவன் முடிவு செய்தான்.

அடுத்தநாள் அதிகாலையில் துரோணரின் ஆசிரமத்தின் முன்

பழங்கள், தேன் , காட்டில் கிடைக்கும் அரியவகை கிழங்கள், பூக்கள்

நிரம்பிய தட்டுடன் நின்று கொண்டிருந்தான். துரோணர் தன் குடிலைவிட்டு

வெளியே வந்தவுடன் அவர் காலில் விழுந்து வணங்கி தன் காணிக்கையைச்

செலுத்தினான்.


யாராப்பா நீ?


சுவாமி, நான் அஸ்தினாப்புரத்தை அடுத்துள்ள மலைப்பகுதியில்

வசிக்கும் வேடர் குலத் தலைவனின் மகன். என் பெயர் ஏகலைவன்.

தங்களிடம் தனுர்வேதத்தைக் கற்றுக் கொள்ள ஆவலுடன் வந்திருக்கிறேன்.

என்னை தங்களின் சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். கருணை புரியுங்கள்

சுவாமி.


ஏகலைவா! நான் அரசகுமாரர்களுக்கு மட்டுமே ஆசிரியனாயிருந்து

பயிற்சி தருவது என்ற கொள்கையில் உறுதியாயிருக்கிறேன். அதில் மாற்றம்

செய்து கொள்வதாக இல்லை. உன் காணிக்கையை எடுத்துக் கொண்டு

நீ போகலாம்.


ஆச்சாரியாரே! நானும் ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவனின்

மகன்தான். என் தந்தைக்கு அடுத்து நானே அவர்களின் தலைவனாக

ஆவேன். எனவே தங்கள் கொள்கைக்கு உட்பட்டவனாகத்தானே ஆகிறேன்?


இல்லை ஏகலைவா! அரசகுலத்துக்கு இணையாக உன்னை

வைத்துப் பேசாதே! மலையில் வசிக்கும் காட்டுவாசிகளுக்கு தலைவனாக

இருப்பதால் நீ அரசனாகி விடமுடியாது. நீ வசிக்கும் பகுதிக்கு அரசன்

உண்மையில் அஸ்தினாபுரத்து அரசனான திருதராஷ்டிரர்தான். அவரின்

குடிமக்களே நீங்கள் அனைவரும். எனவே இனி என்னிடம் வாதம்

செய்யாமல் திரும்பிப் போய்விடு, என்று கூறியபடி திரும்பி குடிலுக்குள்

நுழைந்து விடுகிறார் துரோணர்.


மிகுந்த மனவருத்தத்துடன் கானகம் திரும்பிய ஏகலைவன். ஒரு

மரத்தினடியில் அமர்ந்து யோசிக்கிறான். ‘தன் ஆர்வத்திற்கு இப்படி ஒரு

தடையா? சரி பரவாயில்லை, ஆர்வம் இருந்தால் யார்வேண்டுமானாலும்

எதையும் கற்றுத்தேர முடியும். என்னால் முடியும் என்று நம்பும்போது

எதையும் சாதிக்க முடியும், உனக்குள்ளிருக்கும் சக்தியே உனக்கு

வழிகளைக் காட்டித்தரும் என்று என் பாட்டனார் கூறியிருக்கிறார்.

துரோணாச்சாரியார் எனக்கு கற்றுத் தர மறுத்தாலும் நான் அவர்மீது

வைத்திருக்கும் மரியாதை சிறிதும் குறையவில்லை. இது, வில்வித்தையில்

அவருக்கிருக்கும் ஆற்றலின் மேல் நான் வைத்திருக்கும் மதிப்பு.


அவரையே என் மானசீக குருவாக வைத்து தனுர்வித்தையை கற்றுக்

கொள்கிறேன்’ என முடிவு செய்தான். களிமண்ணால் துரோணர் போலவே

சிலை ஒன்றை செய்தான். அதை தான் அமைத்த பயிற்சி திடலில்

வைத்தான். நல்ல நாளில் சிலையை வணங்கி வில்லைக் கையிலெடுத்தான்.

மன ஒருமுகத்துடன் குறி பார்த்து அம்பை இழுத்து இலக்கை நோக்கி

எய்தான். தனுர் வேதத்தின் அத்தனை வித்தைகளும் அவனுக்கு கைவந்தது.

பயிற்சியையே ஒரு தியானமாக மேற்கொண்டான். அறியாத பல உண்மைகள் அவனுக்கு விளங்கியது. அஸ்திரம் எய்யும் திறன்களெல்லாம்

ஓடிவந்து, அவனிடம் ஒட்டிக் கொண்டது.


மிகச் சிறந்த வில்வீரனாக மெருகேறினான் ஏகலைவன்.


ஓருநாள் பாண்டவர்களும் கௌரவர்களும் தங்கள் விற்களோடு

கானகத்திற்குள் வேட்டையாட வருகிறார்கள். அவர்களுடன் சில

வேட்டைநாய்களும் வருகின்றன.


ஏகலைவன் தன் பயிற்சியில் ஒரு முகப்பட்ட மனதோடு ஈடுபட்டுக்

கொண்டிருக்கிறான். மனமும் , கைகளும், கண்களும் ஒன்றின. காற்றைக்

கிழித்துக் கொண்டு பறந்த அம்பு முள் முனையளவும் விலகாது சரியாய்

இலக்கினைத் தொலைத்தது.


அடுத்த அம்பினை எடுத்தான். ‘வள் வள் ளென்று’ எங்கிருந்தோ

வந்த நாயின் சத்தம் அவனது கவனத்தை சிதைத்தது. நாயின் சத்தம்

அதிகரித்து ஏகலைவனுக்கு எரிச்சல் மூட்டியது. அதை நிறுத்து என்று

அவனுள் குரல் ஒன்று எழுந்தது.

கண்களை மூடி, செவிகளைக் கூராக்கினான். சத்தம் வந்த திசையினை நோக்கி அம்புகளை செலுத்தினான். நாயின் சத்தம் அடங்கியது. மீண்டும் தன் பயிற்சியில் கவனம் செலுத்தினான்.


தன்பின்னால் இருந்த நாயின் குரைப்புச் சத்தம் திடீரென அடங்கி, அதன் முனகல் சத்தம் மட்டும் கேட்டதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்து

அர்ச்சுனன் திரும்பிப் பார்த்தான். திகைத்தான்.

எவனோ எய்த அம்புகள் கச்சிதமாய் நாயின் வாயை வளைத்து


நாயின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் வளைபோல் பின்னி

மூடிவிட்டன.


தான் அறியாத வித்தையாக இருக்கிறதே. தனக்கு அனைத்து வித

அஸ்திரப்பயிற்சிகளையெல்லாம் கற்றுத் தந்துள்ளதாகக் கூறிய ஆச்சாரியார் இப்படி ஒரு வித்தையை தனக்குக் கற்றுத் தரவில்லையே? அர்ச்சுனனின் மனம் சுருங்கியது. மனதை முகம் பிரதிபலித்தது.


யுதிர்ஷ்டர் இதைக் கவனித்து விட்டார். ‘என்ன அர்ச்சுனா ஏன் ஒரு

மாதிரியாக இருக்கிறாய்?’


‘ஒன்றும் இல்லையண்ணா, உடல் சற்று அசதியாக இருந்தது. மற்றபடி

எந்தக் காரணமும் இல்லை.’


‘சரி , அப்படியென்றால் திரும்பி விடலாம். படுத்து, ஓய்வெடுத்தால்

எல்லாம் சரியாகிவிடும். எல்லோரும் திரும்புங்கள், வேட்டையாடியது

போதும், நேரமாகிவிட்டது. மீண்டும் வேறொருநாள் வருவோம், எனக்

கட்டளையிட்டார் யுதிஷ்டர். எல்லோரும் அரண்மனை திரும்பினர்.


அர்ச்சுனன் மனம் அமைதியடையவில்லை. நேரே ஆச்சாரியாரின்

ஆசிரமம் சென்றான். அர்ச்சுனனின் வாடிய முகம் பார்த்ததும், ஏதோ

காரணம் இருக்கிறது என்று துரோணருக்குப் புரிந்து விட்டது.


என்ன அர்ச்சுனா? இந்த நேரத்தில் என்னைத்தேடி வரக்காரணம்

என்ன?


ஆச்சாரியாரே! அஸ்திரப்பயிற்சி யாவும் எனக்கு கை வந்து விட்டதா?


அதிலென்ன சந்தேகம் அர்ச்சுனா? உன்னை மிஞ்ச இந்த

பரதகண்டத்தில் ஒருவரும் இல்லை. வில்லுக்கு விஜயன் என்று

உன்பெயரைத்தான் இந்த வையகம் நாளை நினைவு கூறும். ஏன் இப்படி

ஒரு கேள்வியைக் கேட்கிறாய்?


குருவே! எனக்கு நீங்கள் சொல்லித்தராதது இன்னும்

பாக்கியிருக்கிறது என நினைக்கிறீர்களா?


அர்ச்சுனா! உன் கேள்வியின் தொனி என்னை சந்தேகப்படுவது

போல் ஒலிக்கிறது. என் மகன் அஸ்வாத்துமனுக்கு சொல்லித்தந்த

வித்தைகளையெல்லாம் உனக்கும் சொல்லித் தந்திருக்கிறேன். நானறிந்த

அஸ்திரப் பயிற்சிகளையெல்லாம் உனக்குக் கற்றுத் தந்திருக்கிறேன். இனி

மேல் அதை மெருகுப்படுத்திக் கொள்வதென்பது தனிப்பட்ட உனது

திறைமையிலும் முயற்சியிலும்தான் இருக்கிறது. ஏன் உனக்கு இந்த

சந்தேகம் வந்தது? சொல் அர்ச்சுனா?



குரு முதலில் என்னை மன்னிக்கவும். இன்று நாங்கள் வேட்டைக்குச்

சென்றிருந்த போது ஒரு ஆச்சரியத்தைப் பார்த்தேன். எவனோ ஒருவன்

எய்த அம்பொன்று என்னுடன் வந்த நாயின் வாயைக் கச்சிதமாய் தைத்து

அதன் குரைப்பை அடக்கியது. அதைப் பார்த்த நொடியில் அதை எய்தவனின்

திறமையின் மேல் என்னையறியாமல் ஒரு பொறாமை உண்டாகியது.

எனக்கு நிகராய் அல்ல, என்னை விட மேலான வில்லாளி ஒருவன் இங்கே

இருக்கிறான், அல்லது உருவாகிக் கொண்டிருக்கிறான் என்பது எனக்கு

விளங்குகிறது. இனி எனக்கு உறக்கம் வராது, உணவும் பிடிக்காது ஐயனே!

உங்களைத் தவிர என் வேதனையை நான் யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?


‘நல்லது அர்ச்சுனா! என் மீது நீ வைத்திருக்கும் அன்பிற்கு நன்றி.

நீ கூறியது எனக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நீ முயன்றால்

வில்லினால் ஏகப்பட்ட வித்தைகளை செய்தகாட்டமுடியும். நாம் நாளை

காலையில் கானகம் சென்று யாரந்த வில்லாளி எனக் காண்போம்.

இப்போது நீ மனக்குழப்பம் இன்றி போய் தூங்கு.’


அர்ச்சுனன் துரோணரிடம் விடைபெற்று அரண்மனை நோக்கிச்

சென்றான்.


அடுத்தநாள் காலை அர்ச்சுனனும், துரோணரும் கானகம் நோக்கி

விரைந்தனர். நாய் வாயின் தைக்கப்பட்ட இடம் வந்ததும், சுற்றுப் புறம்

முழுவதையும் தேடி அந்த பயிற்சி திடலைக் கண்டனர்.


பயிற்சி திடலின் ஒரமாய் குடிலொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன்

முன் புறத்தை கண்ட துரோணரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.


அவரது ஆளுயுரச் சிலையொன்று அமைந்திருந்தது. அர்ச்சுனனும்

அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.


திடலின் வாயிற் பகுதியை நெருங்கிய வேளையில், குடிலுக்குள்

இருந்து இளைஞன் ஒருவன் வெளிவந்தான். சிறுவன் என்றும் சொல்ல

முடியாத இளைஞன் என்றும் சொல்லமுடியாத இரண்டும் கெட்டான் என்று

சொல்லக்கூடிய தோற்றத்தில் இருந்தான்.



துரோணரின் மனம் அவனை உடனே எடைபோட்டது. உறுதியான

உடல் வாகு. வலிமையான முறுக்கேறிய புஜமும் கைகளும் அவன் சிறந்த

வில்லாளன் என்பதை பறைசாற்றியது. முகத்தில் தெரிந்த அமைதி,

அவன் மிகச் சிறந்த கெட்டிக்காரனாக இருக்க வேண்டும் என்பதையும்,

எளிதில் உணர்ச்சி வசப்படாத நிதானக்காரன் என்பதையும் உணர்த்தியது


துரோணரைப் பார்த்த நொடியில் அவன் முகத்தில் மகிழ்ச்சியின் வெளிச்சம் பளிச்சிட்டது. விரைந்து வந்து, ஆச்சாரியாருக்கு வணக்கம்! அவரது பாதங்களை வணங்கினான்.



ஏகலைவா உன் குடிலா இது? என்ன செய்கிறாய் இங்கு?


ஆம் குருவே! என்குடில்தான். இதுதான் என் விற்பயிற்சிக்கூடம்.


அப்படியா, யார் உன் குரு? யாரிடம் நீ பயிற்சி பெறுகிறாய்?


ஆச்சாரியாரே! என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நீங்கள்தான் என்

குரு. இதோ உங்கள் சிலை. உங்களை முன்நிறுத்தித்தான் என் பயிற்சியை

ஆரம்பித்தேன். மனதுக்குள் இருந்து என்னை பயிற்றுவித்தவர் நீங்கள்தான்.


ஆச்சரியம் ஏகலைவா! உன் அனைத்து திறமைகளும் என்னால்

வந்தது என்கிறாயா?


இதிலென்ன சந்தேகம் இருக்க முடியும் குருவே. என்னை

வழிநடத்தியவர் நீங்கள். என் மனதில் உங்கள் உருவை நிறுத்தி உங்களிடம்

கேட்பேன் நீங்கள் கூறியதைப் பின் பற்றுவேன். அப்படித்தான் கற்றேன்.


துரோணரின் புருவம் சுருங்கியது. மானசீகமாக கற்ற இவனின்

திறமையே இப்படி இருக்கிறது. ஒரு குருவின் முன்னிலையில் இந்த

வித்தையைக் கற்றிருந்தால் இவனைப் பிடிக்கவே முடியாது. இவனை

வெல்ல ஒருவனுமே இருக்க மாட்டார்கள். அர்ச்சுனனின் அச்சம் சரிதான

போலிருக்கிறதே! அர்ச்சுனனை மிஞ்சிய வீரனாய் இவன் நிச்சயம் வருவான்.

நாளை அர்ச்சுனனுக்கு சவாலாய் இருக்கப்போவதும் இவன்தான். இதை

இப்படியே விட்டுவிடக் கூடாது.. என்ன செய்யலாம் என்று சில விநாடிகள்

யோசனையில் ஆழ்ந்தார்.


அதற்குள் ஏகலைவன், அவர்கள் உண்பதற்கு பழங்களைக் கொண்டு

வந்தான்.


ஏகலைவா! நீ என் மாணவன்தானே?


ஆம் குருவே!


உன் குருவிற்கு நீ காணிக்கை செலுத்த வேண்டும்தானே? நான்

எதைக் கேட்டாலும் தருவாயா?


நிச்சயமாக குருவே! அதற்காக காத்திருக்கிறேன். என்ன வேண்டும்

சொல்லுங்கள்?


பின்னால் ஏன் கொடுத்தோம் என்று வருந்த மாட்டாயே?


சத்தியமாய் மாட்டேன் குருவே!


குருதட்சணையாய் எனக்கு உன் வலது கை கட்டைவிரலைத் தா

ஏகலைவா!



ஏகலைவன் குடிசைக்குள் ஓடி தன் தந்தை தனக்கு வழங்கிய

இடைவாளை எடுத்து வந்தான்.


அங்கிருந்த பாறையின் மேல் தன் வலது கையை வைத்து, இடது

கையில் வாளைப் பிடித்து ஒரே வெட்டாய் வெட்டினான், கட்டை விரல்

துண்டாகித் துள்ளி விழுந்தது.


அய்யோ இது அநீதி, இது அநீதி என்பது போல மரத்தின்

மேலிருந்த அணில்கள் கிறீச்சிட்டன. இக்காட்சியை காண சகிக்காத

பறவைகள் கூட்டம் படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு,

மரத்திலிருந்து எழுந்து, பறந்து வெகுதூரம் போயின.

கையிலிருந்து குருதி பீச்சியடித்தது. துரோணரின் முகத்தில் சில

துளிகள் தெறித்தன. இடது கையால் அழுத்திப்பிடித்துக் கொண்டே,

வலது கட்டைவிரலை எடுத்து குருவின் பாதங்களில் வைத்தான் ஏகலைவன்.


‘ஏகலைவா உன் தட்சணையை ஏற்றுக் கொண்டேன்’ என்றார்

துரோணர்.


அர்ச்சுனனுக்கு சாடை காட்டினார். அந்த விரலை எடுத்து ஒரு மர

இலையில் சுற்றிக் கொண்டான். இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.


வலியில் தவித்த ஏகலைவன்.பல்லைக் கடித்துக் கொண்டே, சில

பச்சிலைகளைப் பறித்து நசுக்கி விரலில் வைத்துக் கட்டினான் பீச்சியடித்த

குருதி நின்றது. பலவீனமாய் இருந்த ஏகலைவன் மயங்கித் தரையில்

சரிந்தான்.


இரவில் அவனைத் தேடி வந்த நண்பர்கள் அவனைத் தூக்கிச்

சென்றனர்.


அவனுக்கு நினைவு திரும்பிய போது, “குரு ஏன் என் கட்டை

விரலை காணிக்கையாய் கேட்டார்’ என்றக் கேள்வி அவன் மனதில் எழுந்து

கொண்டே இருந்தது.


வேதியா! கதை இதற்கு மேல் தேவையில்லை என்று

நினைக்கிறேன். ஒரு மாணவனுக்கு வித்தைகளை முறையாய் கற்றுத்

தருபவனே நல்ல ஆசிரியன். தன்னைத் தேடி வந்து, தனக்கு பயிற்சி

தரச்சொல்லி கெஞ்சிய ஏகலைவனை மாணவனாக ஏற்றுக் கொள்ளாத

குரு. அவன் சுயமாய் பயிற்சிகளை கற்றுக் கொண்டு ஒரு சிறந்த வில்லாளி

ஆனபின், நான் உன் குருதானே என்று குரு தட்சணை கேட்டது

நியாயமா?



ஒரு வீரனுக்கு மட்டுமன்றி ஒவ்வொரு மனிதனுக்கும் வலிமையைத்

தருவது வலது கையின் கட்டைவிரல். அது இல்லையென்றால் அவனால்

வலுவான வேலை எதையுமே செய்ய முடியாது. ஒரு வில்வீரனுக்கு,

நாணிழுக்க மிகவும் இன்றியமையாதது அவனது வலது கையின்

கட்டைவிரல், தான் ஒரு குருவாக எந்த ஒரு கடமையையும் செய்யாமல்,

ஏகலைவனது திறமைகளை இல்லாமல் செய்து விடவேண்டும் என்ற

நோக்கத்தில் கட்டைவிரலை கேட்டது எந்த விதத்தில் சரியாகும்?


துரோணரின் செயல் சரியானதுதானா? குருதட்சணைக் கேட்க

அவருக்கு தகுதியிருக்கிறதா? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்திருந்தும்,

நீ சொல்லாமல் மௌனம் சாதிப்பாயானால் உனது தலை சுக்கு நூறாய்

வெடித்துச் சிதறும்.


வேதாளமே ! சாமர்த்தியமான உன் கேள்வியை மெச்சுகிறேன்.

ஒரு செயலை அது நல்லதா கெட்டதா? சரியா தவறா? என்று எப்படி முடிவு

செய்வது? அந்த செயல் என்ன விளைவுகளை உண்டாக்குகிறது, அல்லது

அச்செயலினால் ஏற்படும் தொடர்விளைவு என்ன? என்பதை வைத்தே

முடிவு செய்கிறோம் என்பதுதானே சரி. சில சமயங்களில் உடனடி

விளைவுகள் பார்ப்பதற்கு தவறாகத் தோன்றினாலும் தொலைநோக்குச்

சிந்தனையுடன் அதை ஆராய்ந்தால் பிற்கால விளைவுகள் மிகச்

சரியானதாகவே இருக்கும். மிகப்பெரிய பாதகத்தை தடுப்பதாய் இருக்கும்.


இனி ஆராய்வோம்!


துரோணரின் சிலையை செய்து வைத்து அவரை குருவாக ஏற்றுக்

கொள்கிறான் ஏகலைவன். மானசீகக் குரு என்ற ஒரு ஸ்தானத்தை நம்

சாஸ்திரங்கள் அங்கீகரிக்கிறது. நீங்கள் தான் என் குரு என்று துரோணரிடம்

கூறுகிறான் ஏகலைவன். எனவே அவனுக்கு குரு துரோணரே என்பது

தீர்மானமாகிவிடுகிறது. எனவே குருதட்சணை கேட்கும் உரிமையும்

துரோணருக்கு வந்து விடுகிறது. அவர் கட்டை விரலை ஏன் கேட்டார்

என்பதுதான் இப்போது முன்னிற்கும் கேள்வி. அதற்கான காரணத்தைப்

பார்ப்போம்.


ஏகலைவன் அஸ்தினாபுரத்தின் அருகில் கானகத்தில் வசிக்கும்

வேடன். எதிர்காலத்தில் அவன் அர்ச்சுனனுக்கு மேலானவனாய்

உருவாவதோடு, எதிராக நிற்கக்கூடிய கூடிய அபாயமும் நேரலாம்.

துரோணரால் பயிற்றுவிக்க மறுத்து அனுப்ப்பட்ட இன்னொரு வீரன் கர்ணன்

என்பது நமக்குத் தெரியும். அவன் அர்ச்சுனனுக்கு எதிராக போட்டிக்கு

வரும்போது, துரியோதணனால் ஆதரிக்கப்பட்டான், அர்ச்சுனனுக்கு சவால்

விடக்கூடிய நிலையில் இருக்கும் இவன், நாளை நமக்கு ஆதரவாய்

இருப்பான் எனக் கருதியே துரியோதணன் அவனை நண்பனாக ஏற்றுக்

கொள்கிறான். அங்க தேசத்தின் அரசனாக்கி அவனை தன் பக்கம் இழுத்துக்

கொள்கிறான்.


இருப்பினும் இந்திரன் கேட்ட தானம், குந்தி கேட்ட வரம்,

கண்ணபிரானின் சூழ்ச்சி எல்லாம் கர்ணனை பலவீனமாக்கிவிடுகிறது.

அதனால் அர்ச்சுனனின் கையால் கொல்லப்படுகிறான்.

மேற்சொன்ன யாவும் நடைபெற்றிருக்காவிடில் அர்ச்சுனன், கர்ணன்

கையால் மடிந்திருக்கவும் கூடும்.


‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கௌவும், தர்மம் மறுபடி வெல்லும்’

என்பதுதானே மகாபாரதம் வழி நாம் அறியும் நீதி.


தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காகவே மேற்சொன்ன நிகழ்வுகள்

யாவும் நடைபெற்றன. இல்லையெனில் தர்மத்தின் மேல் எவருக்கும்

நம்பிக்கையில்லாமல் போய்விடும்.


அர்ச்சுனனை விட மிகப்பெரிய வில்வீரனாய் ஏகலைவன்

உருவாகியிருக்கக் கூடிய பட்சத்தில், அஸ்தினாபுரத்தின் அருகில் தங்களது

ஆட்சிக்கு உட்பட்டு இருக்கும் கானகத்தில் வசிக்கும் அவனை தங்கள்

பக்கம் இழுப்பதில் துரியோதணனுக்கு பெரிய சிரமம் இருந்திருக்காது.

கர்ணனை குந்தி பாசத்தால் கட்டிப்போட்டதைப் போல் ஏகலைவனை

கட்டுப்படுத்த எவராலும் முடியாமல் போயிருக்கும்.


அப்படியிருந்தால் பாண்டவர்களின் நிலை தோல்விதான். தர்மம்

தோற்றுப்போகும்.


சரி, பாண்டவர்கள் வெற்றி பெறும் சூழலே நிலவியிருந்தாலும்,

இறுதியில் கர்ணனைப் போலவே ஏகலைவனும் மாண்டிருப்பான், அவனது

வாரிசுகளும், வேடர் இனமும் சுத்தமாய் அழிந்து போயிருக்கும். இப்படி

எந்தக் கோணத்தில் பார்த்தாலும், தர்மத்தை காப்பாற்றும் வேலையையும்,

ஏகலைவனையும், அவன் இனத்தையும் காப்பாற்றும் உதவியையும் துரோணர் செய்திருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


ஒரு கதையில் படித்த ஞாபகம். பிற்காலத்தில் குருக்ஷேத்ரப் போர்க்களக் காட்சிகளை, அருகிலிருக்கும் குன்றிலிருந்து ஏகலைவன் பார்வையிடுகிறான்.


விற்கள் பறக்கின்றன. அஸ்திரங்கள் எரிக்கின்றன. எங்குப்பார்த்தாலும்

பிணக்குவியல்கள். கழுகுகளும், நரிகளும் மனித உடல்களைத் தின்றுக்

கொண்டிருக்கின்றன.


ஏகலைவனின் மனம் பதைக்கிறது. ‘அடக்கிருஷ்ணா! மனிதர்களை

கொல்வதற்குத்தான் எல்லாப் பயிற்சிகளுமா? எப்படி அதிகமாய்

மனிதர்களை கொல்வது என்பதற்குத்தான் இத்தனை அஸ்திரப்

பயிற்சிகளையும் போட்டிப் போட்டுக் கொண்டு கற்றுக் கொள்கிறார்களா?


ஐந்தடி நிலம் கூட தரமுடியாது என்று சொன்னதற்காகத்தான் இந்தப்

போரா? இத்தனை உயிர்ச்சேதமா?


கடவுளே! நல்ல வேளை நான் அந்த அஸ்திரப்பயிற்சிகளையெல்லாம்

மறந்து தொலைத்தேன். ஏன் என் குருநாதர் என் கட்டைவிரலைக்கேட்டார்

என்ற கேள்விக்கு விடைதெரியாமல் திரிந்தேன். என்னையும் என்

இனத்தையும் காப்பாற்றவே என் குருநாதர் என் கட்டைவிரலைக்

கேட்டிருக்கிறார் என்பது இன்றுதானே எனக்குப் புரிகிறது. என் குருநாதர்

எனக்கு நல்லதையல்லவா செய்திருக்கிறார்’. என்று ஏகலைவன்

எண்ணுவதாய் கதையின் போக்கு செல்கிறது.


‘வேதாளமே!


பகவத் கீதையில், ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற அக்குடும்பத்தில்

ஒருவரைப் பலி கொடுக்கலாம், ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு

குடும்பத்தைப் பலிகொடுக்கலாம், ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு

கிராமத்தையே பலிகொடுக்கலாம் என்று கிருஷ்ணர் கூறுவதாக ஒரு வாசகம்

வருகிறது.


கட்டைவிரலைக் கேட்டது அநியாயம்தான் என்று வாதங்கள்

வைக்கப்பட்டாலும், தர்மத்தை காப்பாற்றவே அந்தச் செயல்

பயன்பட்டிருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டும். எனவே துரோணர்

செய்தது சரியே என்பதை, யோசித்து பார்க்கையில் என்னால் ஏற்றுக்

கொள்ள முடிகிறது.’


வேதாளத்தின் கேள்விக்கு சரியான பதிலை சொல்லியதன் மூலம்

வேதியனின் மௌனம் கலைந்ததால் வேதாளம் அவனிடமிருந்து விடுபட்டு

மீண்டும் புளிய மரத்திற்குச் சென்று, கிளையொன்றைப் பற்றிக்கொண்டு

தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.





תגובות


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page