top of page

வேதாளமும் வேதியனும் பாகம் 10

Updated: Jun 15, 2022

என்னை நானே அறிவதெப்படி?


தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளிய மரத்தில் ஏறி, அதில் தொங்கிக்கொண்டிருந்த பிரேதத்தைக் கீழே தள்ளி, தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


அந்த உடலில் குடி கொண்டிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.


வேதியா! இப்பூமியில் அனைத்து உயிர்களும் , கடல், காற்று , வான், நிலம் நீர், நெருப்பு என அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டன என்று மத நூல்களும் கூறுகின்றன. நாம் கடவுளை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்கிற முயற்சியை செய்து கொண்டுதானிருக்கிறோம். பார்த்தவர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள். அவரை அடைய பக்தி மார்க்கம், ஞான மார்க்கம் என்ற மார்க்கங்களையும்

கூறிவைத்திருக்கிறார்கள்.


நமது முன்னோர்கள் எல்லோரும் கூறிவைத்துள்ள விசயம் என்னவென்றால், ‘ஒருவன் தன்னை அறிந்து கொள்ள வேண்டும்’ என்பதுதான். தன்னை அறிந்தவன் ஞானியாகிறான் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.


நான் யார்? என்ற கேள்வி கேட்டு விடையைத் தேட வேண்டும் என்றும், உன்னையே நீ அறி என்றும் கூறுகின்றனர் தன்னையறிய ஒரு கேடில்லை என்கிறார் தாயுமான சுவாமிகள்


கிரேக்கர்களின் புராணத்தில் சூரியக்கடவுளுக்கு அப்போலோ என்று பெயர். முற்காலத்தில் அக்கடவுளுக்குக் கோயில் எழுப்பி வழிபாடு செய்தனர். அக்கோயிலின் முகப்பில் ‘உன்னை நீ அறிந்து கொள்’ என்றொரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மனிதனும் தன்னை அறிந்தவன்தானே! ஒருவனுக்கு அவனைப் பற்றி எல்லா விசயங்களும் தெரியும்தானே? அவன் யார் மகன், அவன் பெயர் என்ன, அவன் வயதென்ன.. அவன் மனதில் எழும் எண்ணங்கள் என்ன? அவன் செய்யும் காரியங்கள் நல்லவையா?

கெட்டவையா? அவன் ஆசை என்ன? என்று ஒருவன் தன்னைப் பற்றிய அனைத்தையும் அறிந்து வைத்திருப்பான்தானே?


ஒரு மனிதன், அடுத்தவரின் மனதில் புகுந்து அவரைப் பற்றி எல்லா விசயங்களையும் அறிந்து கொள்ள முடியாது. அவர் என்ன சொல்கிறாரோ அதை வைத்துத்தான் அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒருவனுக்கு தன்னைப் பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும், தன் பலம் என்ன? பலவீனம் என்ன என அனைத்து விசயங்களும் தெரியும்.


நீ அவனைப் பற்றித் தெரிந்து கொள், அவளைப் பற்றி அறிந்து கொள், இறைவனைப் பற்றி தெரிந்து கொள், விஞ்ஞானம், பூகோளம், வானவியல் , அறிவியல் என எல்லா விசயங்களையும் தெரிந்து கொள் என்று கூறினால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது.. ஆனால் உன்னையே

நீ அறிந்து கொள் என்று சொல்வது அறிவிற்கு பொருந்தாததாகத் தெரியவில்லையா?


நீ என்னிடம் உன்னைப் பற்றிக்கூறு? என்றால் நான் என்னைப் பற்றி கூறுவேன். நீ யார்? என்று கேட்டால் நான் என் தாய் தந்தை சகோதரர்களைப் பற்றிக்கூறி என்னை அறிமுகப்படுத்துவேன். இப்படி இருக்கும் போது ஒருவரிடம் வந்து நீ உன்னை அறிந்து கொள் என்று

கூறுவது சரியாகுமா? சரி, அந்தக் கூற்று சரியானதுதான் என்றால் அதைப்பற்றி எனக்குக் கொஞ்சம் விளக்குவாயா?


வேதாளமே! இந்தக் கேள்வியை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆன்மிக நிலையில் சற்று ஆழமாக பார்க்க வேண்டும். அப்படிப்பார்க்கச் சொல்லித் தூண்டவே, ‘உன்னையே நீ அறி’ என்று கூறுகிறார்கள்.


நீ யார்? என்ற கேள்வி ஏற்கனவே சிலரிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்தக் கேள்விக்கு அவர்கள் கூறிய, பதில் நீ கூறிய விளக்கத்திலிருந்து வித்தியாசமானதாய் இருக்கிறது.


ஆதிசங்கரரிடம் ஒரு சிறுவனை அவனது தகப்பன் கூட்டிவருகிறார். பிறந்ததில் இருந்து இவன் பேசவில்லை என்று வருந்துகிறார்.


சங்கரர் அச்சிறுவனை பார்த்து யார் நீ? என்றுக் கேட்கிறார். அச்சிறுவன் நான் யாரொருவருமல்லேன் நான் ஞான சொரூபமானவன். ஒன்றே பலவிசயங்களாக இந்த உலகம் முழுதும் பரவிக் கிடக்கின்றது. அது வெவ்வேறு ரூபமாகவும் இருக்கிறது. அந்த சுடர்விடும் ஆன்மா நான்

என்று பதில் கூறுகிறான்.


ஹஸ்தாமலன் என்ற அந்தச் சிறுவன் தன் தந்தையின் பெயரையோ, பெற்றோர் தனக்கு வைத்தப் பெயரையோ கூறவில்லை. தன்னை அறிந்தவன் அவன். நான் யார் என்று தெரிந்தவன் அவன் என்பதால் அவன் , தன்னைப் பற்றி தெளிவாகக் கூறுகிறான். அவன் அறிந்தவற்றைத்தான் நாமும் அறிய வேண்டும். அந்த ஞானத்தை நாம் பெற வேண்டும் என்பதற்காகத்தான் உன்னை நீ அறிந்து கொள் என்று தன்னை அறிந்த ஞானிகள் கூறுகிறார்கள்.


அதே போல் இன்னொரு சம்பவம். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக் கரை அமைந்துள்ள திருக்குருகூரைச் சேர்ந்தவர் காரி. அவருக்கு ஒரு ஆண் மகவு பிறக்கிறது. பிறந்தது முதல் அது அழவில்லை.

உணவு உண்ணவில்லை. கண்களையும் திறக்கவில்லை. ஆனால் சுவாசம் சற்று சீறலாய் கேட்டது . பெற்றோர் அதற்கு சடகோபன் என்று பெயர்வைத்தனர்.


அக்குழந்தை சிறுவயது முதல் உணவு நீர் எதுவும் உண்ணாமல் ஊமையாய் இருந்ததால் அதை அவ்வூரிலிருந்த ஆதிநாராயணன் கோயிலில்

விட்டுவிடுகின்றனர். அங்கிருந்த புளியமரத்தில் அக்குழந்தை தாவி அதிலிருக்கும் பொந்தில் தாமரை வடிவில் அமர்ந்து விடுகிறது. குழந்தைக்கு

பதினாறு வயது நடக்கிறது.


வடக்கேயிருந்து வந்து கொண்டிருந்த மதுரகவியாழ்வாருக்கு தெற்கே பிரகாசமாய் ஒரு சுடர் தெரிகிறது. அதை பார்த்தவாறே வந்த மதுரகவியாழ்வார், சடகோபன் இருந்த புளியமரத்திற்கு வந்து சேர்கிறார்.

சடகோபனைப் பார்த்து யார் நீ? என்று வினவுகிறார். முதன் முதலாய் கண்திறந்த சடகோபன், நீயே நான்! என்கிறான். அச் சிறுவன் ஞான சொரூபம் என்பது மதுரகாவியாழ்வாருக்குத் தெரிகிறது. .’செத்ததில்

பிறந்தது எத்தை தின்று எதில் வாழும் என்று கேட்கிறார். அத்தைத்தின்று அதில் வாழும் என்று பதில் சொல்கிறான்.

அதன்பிறகு மதுரகவியாழ்வார் அச்சிறுவனுக்கே சீடராகி அங்கேயே தங்கிவிடுகிறார். அச்சிறுவன் வைஷ்ணவத்தின் உண்மைகளை அவருக்கு

எடுத்துக்கூறி இறைவனைப் பற்றி பலப் பாசுரங்கள் பாடுகிறான். அச்சிறுவனே, நம்மாழ்வார் என்று சிறப்புப் பெயர் பெற்று ஆழ்வார்களில் ஒருவராக அழைக்கப்படுகிறார்.


வேதாளமே! நமது உடல் மரணத்தால் அழியக்கூடியது. இந்த உடலுக்குள் இருப்பது அழியாத ஆன்மா. அதுதான் உயிருக்கு ஒளியைக் கொடுக்கிறது. மனதிற்கு சிந்திக்கும் ஆற்றலைத் தருகிறது.இந்த உடலை விட்டுஆன்மா நீங்கும் போது மரணம் ஏற்படுகிறது. உடல் அழிகிறது. ஆனால் ஆன்மாவிற்கு மரணம் இல்லை. பிணியும் மரணமும் , இன்ப துன்பமும் உடலுக்குத்தான். ஆன்மாவிற்கல்ல இந்த உடலுணர்வோடு இருக்கும் பொழுது ஆன்மாவிற்கு இன்ப துன்பம் உண்டு. ஆனால் ஒரு மனிதன் தன்னுள் இயங்கும் தன் ஆன்மாவை உணர்ந்தபின் அவனுக்கு தான் ஆன்மா என்ற உண்மை நிலை புரிகிறது, இவ்வளவு நாள் தன் ஆன்மா மாயையில் அகப்பட்டு தன்னை அறியாத நிலையில் இருககிறது என்பது தெரிகிறது. தியானத்தில் ஒருவன் இந்த ஆன்மாவை உணர்ந்த பின் ஆன்மாவைச் சுற்றியுள்ள மாயைத்திரை விலகுகிறது. சகல ஞானமும் அவனுக்கு வருகிறது.


அந்த ஆன்மாதான் உண்மையான நீ. இந்த உடல் நீ தற்காலிகமாக குடியிருக்கும் வீடு. இதன் பின் இந்த ஆன்மாவாகிய நீ வெளியேறிவிடுவாய். இந்த உடலில் இருக்கும் காலத்தில் மாயையில் நீ அகப்பட்டு கிடந்தாய்,

அப்போது வினைகள் பல புரிந்தாய். அந்த வினைகளை நீதான் அறுவடை செய்தாக வேண்டும். அதற்கேற்ப நீ மீண்டும் பிறவியெடுத்து, மாயையில் மீண்டும் அகப்பட்டு, முன் வினைகளையும் தீர்க்க வேண்டும்.


நீ உன்னை அறிந்து கொண்டால். நீ யார்? என்ற உண்மையை அறிந்து கொண்டால் இந்த வினைகளிலிருந்து விடுதலை பெற்றுவிடுவாய்.

பிரபஞ்ச பெருவெளியில் எங்கும் நிறைந்த எல்லாமாகி நிற்கும் பிரம்மத்துடன் ஒன்றி விடுவாய் . நீயே பிரம்மமாகி விடுவாய்.


இதைத்தான் அகம் பிரம்மாஸ்மி என்கிறது பிருகதாரண்ய உபநிடதம். நானே பிரம்மம் என்று உணர்தல். தன்னை யறிதல். தத்-த்வ- மஸி - என்கிறது கேனோ உபநிடதம். அதுவே நீ -பிரம்மமே நீ என்று அறிதல்.


பிரம்மம்தான் நம் ஆன்மாவாக ஒளிவீசி நிற்கின்றது. தான் யார் என்ற உண்மை ஞானத்தை பெற்றவர்கள் பிரம்மாகவே ஆகிவிடுகின்றனர் என்கிறது முண்டக உபநிடதம்.


நம் உடல் ஒரு ரதம். ஐம்புலன்களும் அதில் பூட்டப்பட்டக் குதிரைகள். அறிவு சாரதி. மனது கடிவாளம். இந்த ரதத்தில் இருப்பதுதான் ஆன்மா.


இந்த ஆன்மா பிறப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. அழிக்க முடியாதது. என்றும் உள்ளது.


உலகப்பொருள்கள் உயிர்கள் அனைத்திலும் உள்ளொளியாக இருப்பது இதுவே. இது அணுவுக்கும் அணுவானது. அண்டத்திற்கும் அண்டமானது. நூல்களைப் படிப்பதன் மூலமும், விவாதங்களின் மூலமும் இதை உணர்தல் இயலாது.


தன்னில் மூழ்கி, அறிய வேண்டும் என்று முயல்பவர்களுக்கு ஒளியாய் இது புலப்படுகிறது. ஐம்புலன்களும் அடங்கி மனதிலே அமைதி நிலவி, அறிவு

ஒருமுகப்பட்டு இருக்கும் பொழுது ஆன்ம ஒளி தெளிவாக புலப்படும் என்று கடோப நிஷதம் கூறுகிறது.


வேதாளமே! ‘உன்னை நீ அறிந்து’ கொள் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பதெல்லாம் . உன்னுள் இருக்கும் ஆன்மாவை அறிந்து கொள். நான் யார்? என்ற விசாணையின் மூலம் அவற்றைத் தேடித் தெரிந்து கொள் என்றுதான் கூறுகிறார்களேத் தவிர , மரித்து போகும்

இந்த உடல் தொடர்புடைய உன்னை அல்ல. இந்தப்பிறவியில் இந்த உடலோடு சம்மந்தப்பட்ட, உன் வினைகளினால் ஏற்பட்ட உன் உறவுத் தொடர்புகளையல்ல! நீ என்பது தூய ஆன்மா அதை உணர்ந்து கொள் என்றே கூறுகிறார்கள்.


வேதியன் கூறி முடிக்கிறான். சரியான பதிலைக் கூறியதன் மூலம் வேதியனின் மௌனம் கலைந்ததால் அவனிடம் இருந்து விடுப்பட்ட வேதாளம் மீண்டும் புளிய மரத்திற்குச் சென்று ஒரு கிளையைப் பற்றிக் கொண்டு தலைகீழாய் தொங்க ஆரம்பித்தது.




Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page