top of page

வேதியனும் வேதாளமும் பாகம் 9

Updated: Jun 15, 2022

ஏனிந்த முரண்பாடு?



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத வேதியன் புளியமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பிரேதத்தைக் கீழேத் தள்ளி அதை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.


அப்போது அந்த உடலில் குடியிருந்த வேதாளம் பேச ஆரம்பித்தது.


வேதியா! இறைவன் மனிதனுக்கு வாய் என்ற புலனைக் கொடுத்தது, உணவை உண்பதற்கு மட்டுமல்ல.. எண்ணங்களை பரிமாற்றம்

செய்து கொள்வதற்கும், தன்னை வழிபடுவதற்கும் என்பது உண்மைதானே?.


செவிக்கு உணவில்லாத போதே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று கூறிவிட்டார்கள். எனவே என் மூளையில் உதிக்கும் சந்தேகத்தைக் கூறி, உன்னிடம் விளக்கம் பெற்று என் செவியை நிரப்பிக்கொள்ளலாம் என்று முடிவிற்கு வந்துவிட்டேன்.


வேதியா! இதுநாள் வரை நமது புராணங்களில் நடைபெற்றதாய் கூறப்படும் , சில சம்பவ நிகழ்வுகளின் முரண்பாடுகளை பற்றி, எனக்குத் தோன்றிய சில சந்தேகங்களை உன்னிடத்தில் கேட்டுத் தெளிவு பெற்றேன். இன்னும் பிற புராணங்களையும் விரிவாக படித்துப் பார்த்தோமானால் அதிலும் சந்தேகங்கள் எழுக்கூடும்.


இருப்பினும் நமது முன்னோர்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே அதன் விளைவுகளை தீர ஆலோசித்தே செய்திருப்பார்கள், இந்த பிரபஞ்ச விதிக்குட்பட்டே, உயிர்களின் நலனை முன்நிறுத்தியே எதையும் செய்திருப்பார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.


சரி இப்போது நான் இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வருகிறேன்.


இப்பூமியில் மனிதனின் வாழ்க்கையானது அவனது முன் வினைகளின் அடிப்படையில் அமைகிறது என்று நம் மதம் கூறுகிறது. இதைத்தான் விதிப்படி வாழ்க்கை, ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறார்கள்.


ஒருவன் ஏழையாய் கஷ்டப்படுவதற்கும், வாழ்க்கையில் அவன் படும் துன்பங்களுக்கும் காரணம் முன் வினைகளின்படி அமைந்த அவனது

தலையெழுத்து, அதை அவன் அனுபவித்தே தீர வேண்டும் எனப் பொதுவாக கூறுவதையும் நாம் கேட்டிருக்கிறோம்.



விதி வலியது. அந்த விதியின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது என்றும் கூறப்படுகிறது.


எனவே முன் பிறவியில் நல்லக் கருமங்களைச் செய்தவன், இப்பிறவியில் நல்ல சந்தோஷமான வாழ்க்கையை அனுபவிப்பான். முன்பிறவியில் தீமைகளைச் செய்தவன் இப்பிறவி வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிப்பான் என்பது தீர்மானமாகத் தெரிகிறது.


இப்படி இருக்கும் போது, இறைவனை வழிபட்டு பாவங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். வினைகளைக் களைந்து கொள்ளலாம், கங்கையில் மூழ்கினால் செய்த பாவங்கள் தீரும், யாகங்கள், ஹோமங்கள் வழிபாடுகள்

செய்து பாவங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறப்படுகிறதே?


மேலும், மகாலக்ஷ்மியை வணங்கினால் செல்வம் வளம் பெறலாம். திரியம்பகம் மந்திரம் சொல்லி நோய் நொடியிலிருந்து விடுபடலாம், மரண கண்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்றும் சொல்கிறார்களே?


விதிப்படி வாழ்க்கையை அனுபவித்தே ஆகவேண்டும். தலையெழுத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்றால், எப்படி பரிகாரங்கள் மூலம் கஷ்டங்களைத் தீர்த்துக் கொள்ளமுடியும்?.


இப்போது, மேற்சொன்ன இரண்டு கருத்துக்களுக்கும் மிகப்பெரிய முரண்பாடு தெரிகிறதே? இதில் எது உண்மை?


பிரம்மன் எழுதிய விதியை மாற்ற முடியாது என்பது உண்மையா?


மாற்றமுடியும் என்று கூறப்படுவது உண்மையா?


வேதியா! என் சந்தேகங்களுக்கு உரிய பதில் உனக்குத் தெரிந்து அதைச் சொல்லாமல் இருந்தால் உன் தலை என்ன ஆகும் என்பதை நீ அறிவாய்? என் கேள்விகளுக்கு உனக்குப் பதில் தெரியுமா? தெரிந்தால் சொல். தெரியாவிட்டால் தோல்வியை ஒத்துக் கொண்டு, வந்த வழியே திரும்பிப் போய்விடு..


வேதாளமே! பதில் சொல்ல மிக இக்கட்டான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்?ஆனால் உன் கேள்வி மிகச் சரியான கேள்விதான். இது உனக்கு மட்டுமல்ல, மக்களில் பலருக்கு அவ்வப்போது தோன்றும் கேள்வி. நம் மதநம்பிக்கையை, இறைநம்பிக்கையை அசைத்துப் பார்க்கக்கூடிய கேள்வி.


எனவே நம் அறிவுக்கும், நம் நம்பிக்கைக்கும் பொருத்தமான, ஆனால் சரியானப் பதிலைச் சொல்ல முயற்சிக்கிறேன்.



‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’. ‘‘பெருமைக்கும் ஆங்கே சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்’ என்ற வரிகள், ஒருவனுடைய செயல்களே அவன் அடைகின்ற நன்மை தீமைக்கு காரணம் என்கின்றன. வயலில் விதைத்ததைத்தான் அறுவடைசெய்ய முடியும்.


சோளம் விதைத்துவிட்டு, நெல்லை அறுவடை செய்ய முடியாது. சோளமே விளையும் என்பதே உண்மை.


‘எவ்வரி ஆக்ஷன் ஹேஸ் எ ரியாக்ஷன்’ என்பார்கள். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்ச் செயல் உண்டு. இது இயற்கையின் நீதி, பிரபஞ்ச சட்டம், இறைவனின் தீர்ப்பு.


எனவே ஒருவன் செய்த செயல்களின் பலனை அவன் அனுபவித்தே தீர வேண்டும். நல்லசெயல்களுக்கு பாராட்டுக்கள் . குற்ற செயல்களுக்கு தண்டனை.


நல்ல செயல்கள் புரிந்தவன் அடுத்தப்பிறவியில் மேன்மையான நிலையையும், தீய செயல்கள் புரிந்தவன் துன்பப்படும் வாழ்க்கையையும் வாழ்கிறான்.


இதைத்தான் தலைஎழுத்து என்கிறார்கள். இதை மாற்ற முடியாது. இதை ஔவை “தாம்தாம் முன் செய்தவினை தாமே அனுபவிப்பர் பூந்தாமரையான் விதிவழியே” - என்கிறார்.


தாமரைப் பூவின் மேல் அமந்திருக்கும் பிரம்மன் எழுதிய விதிப்படி அவரவர் செய்த வினைகளை அவரவர் தாமே அனுபவிப்பர்.


‘ ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதுதான் சிலப்பதிகாரம் வழி நாம் அறியும் உண்மை.


கோவலன் கொலைசெய்யப்பட்டதற்கு காரணம் முற்பிறவியில் அவன் செய்த வினை என்கிறது சிலப்பதிகாரம்.


(அப்படி என்ன அவன் முற்பிறவியில் செய்துவிட்டான் என்பதை வேறொரு பக்கததில் பார்ப்போம்)


மேலும், ஒருவன் வறுமையில் கஷ்டப்படுவதற்கு என்ன காரணம்? அதற்கு காரணமும் முன்வினைதான்.


முற்பிறவியில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யாதவர்கள்,யாருக்கும் எவ்வுதவிகளையும் செய்யாதவர்கள் பிறரின் பொருளை அபகரித்து அதில் சுகம் காண்பவர்கள் யாவரும், இப்பிறவியில் ஏழையாய் வறுமையில் வாடுவார்கள் என்று கூறப்படுகிறது.


ஒருவன் செல்வத்தை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், அவன் முற்பிறவியில் செய்த வினை அவனுக்கு எதிராக இருக்குமானால் அவனால் இப்பிறவில் செல்வத்தை அனுபவிக்க முடியாது.


வள்ளுவர் இதை, வகுத்தான் வகுத்த வகைஅல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. என்கிறார்.

அதாவது இறைவன் எழுதிவைத்த விதிப்படி அல்லாமல் ஒருவன் எவ்வளவுதான் கோடிக்கணக்கில் செல்வம் வைத்திருந்தாலும் அதை அவனால் அனுபவிக்க முடியாது.


எனவே ஒருவன் இப்பிறவியில் அனுபவிக்கின்ற நல்ல

வாழ்க்கைக்கும், அல்லது அவன் துன்பப்படுகின்ற கஷ்ட வாழ்க்கைக்கும் காரணம், முன்பிறவியில் அவன் செய்த பாவ புண்ணியங்களே என்பது நமக்கு புலனாகிறது.


எனவே விதிவழிதான் வாழ்க்கை என்பது உறுதியாகத் தெரிகிறது.


இப்படி இருக்கும் போது, முன்வினைப் பாவங்களைத் தீர்க்க வழிபாடு, பரிகாரம் என்று பல்வேறு விசயங்களை செய்கிறோமே.. யந்திரத்தை வீட்டில் வைத்து வழிபட்டால் , நிலைமை சரியாகும்,

மகாலக்ஷ்மியை நம்பிகையோடு வழிபட்டுவந்தால் வறுமை விலகும் என்றெல்லாம் கூறுகிறார்களே? விதிப்படிதானே வாழ்க்கை. அப்படியென்றால்

மேற்சொன்னவற்றை செய்வதெல்லாம் வீண் வேலைதானே?


இறைவழிபாட்டினால், விதி வழி வகுக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொள்ள முடியுமா?


இந்தக் கேள்வி எல்லார் மனதிலும் எழுவது இயற்கை. சரி, ஒரு வீட்டில், ஒரு சிறுவன் தப்பு செய்து விடுகிறான். அம்மா அடிக்க வருகிறாள். ஓடிச் சென்று அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறான்.


அம்மா பையனை அடிக்க முடியாமல் திரும்பிப் போகிறாள். கணவனை எதிர்த்து எதையும் செய்ய முடியாது. அவளது வலிமை இங்கே செல்லாது. கணவர்தான் குடும்பத் தலைவர். அவர் தலையிட்டால் அதற்கு அப்பீல் இல்லை. பையன் அப்பாவிடம் சரணடைந்து தப்பித்துக் கொள்கிறான்.


சாதாரண ஒரு குடும்பத் தலைவரின் சட்டத்தையே அக்குடும்பத்தில் உள்ளவர்கள் மீற முடியாது. அப்படி இருக்கும் போது,


இங்கு எல்லாவற்றிற்கும் காரணமானவன் இறைவன். இந்த பிரபஞ்சத்தைப் படைத்து,கிரகங்களைப் படைத்து, பஞ்ச பூதங்களைப் படைத்து, உயிர் கூட்டங்களைப் படைத்து, அவற்றை இயக்குபவன். எல்லாம்

ஒரு ஓழுங்குமுறையில் இயங்க வழிவகுத்தவன்.


எல்லாம் வல்ல இறைவனால் முடியாதது எது?

முடியாது என்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?


அவரால் முடியாதென்றால் இங்கு இறைநம்பிக்கையே கேள்விக்குரியதாய் ஆகிவிடுகிறதே? கோயில்களே தேவையில்லையே?


எனவே இந்த பிரபஞ்சத்தின் தலைவனாகிய இறைவன் நினைத்தால் எதையும் மாற்றியமைக்க முடியும். விதியை அவர் தடுக்க முடியும்.


ஏனென்றால் இங்கிருக்கும் அனைத்துக்கும் அவரே ஆதாரம். தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒன்றினை மாற்றியமைக்க அவரால் எப்படி முடியாமல் போகும்.?


எல்லாம் உணர்ந்த ஞானிகளாலேயே ஒருவனது விதியினை மாற்றியமைக்க முடிகிறபோது, இந்த பஞ்ச பூதங்கள் என்ற இயற்கை விதிகளைக் கட்டுப்படுத்த முடிகிறபோது அனைத்துக்கும் சூத்ரதாரியான

இறைவனால் முடியாததா?


மார்க்கண்டேயனின் விதியை மாற்றியவர் அவர்தானே! ஞானிகள், பலருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இறந்தவர்களைக் கூட பிழைக்க வைத்திருக்கிறார்கள் என்பதை படித்திருக்கிறோம். ஞானசம்மந்தர் பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பித்து தந்ததையும், முதலை விழுங்கிய சிறுவனை மீட்டுத்தந்ததையும் நாம் படித்திருக்கிறோம்.

திருநாவுக்கரசர், பாம்பு தீண்டி இறந்த நாவுக்கரசனை உயிர்ப்பித்ததையும் அறிவோம். நீண்ட காலத்திற்கு முன் நடந்த சம்பவங்கள் அவை என்பதால் அவை கற்பனையாக இருக்கலாமோ என்ற ஐயமும் நம் மனதில் இருக்கக்கூடும்..


சமீபத்தில் சித்தர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்த போது, படித்த விசயம்.. ‘போளுர் விட்டோபா சுவாமிகள் என்பவர், ரமணர் , சேஷாத்திரி

போன்ற மகரிஷிகளின் காலத்தவர். அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மறைந்தவர். அவர் எப்போதும் திருமால் நாமத்தையே ஜபித்துக் கொண்டிருப்பார். அதனால் அவருக்கு விட்டோபா என்ற பெயர்

ஏற்பட்டுவிட்டது.


அப்போது அந்த ஊரில் ஒரு பெருஞ்செல்வந்தர் இருந்தார். அவருக்கு பத்துவயதில் ஒருமகள். அழகும் , அறிவும் பெற்றவள். பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு திடீரென முகத்தில் படை போல் தோன்றியது. முகமெல்லாம் பரவி, முகம் விகாரமாகிவிட்டது. எந்த மருத்துவத்திலும் குணமாகவில்லை. ஊழ்வினை என்று கூறிவிட்டனர் ஜோதிடர்கள். நாடி ஜோதிடர்களும் அதுதான் என்று கூறிவிட்டனர். ஆனால் செல்வந்தர்

முயற்சியை நிறுத்தவில்லை..


செல்வந்தர், விட்டோபா இருந்த மரத்தடிக்கு மகளைக் கூட்டிச் சென்றார். விட்டோபா அவர்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அந்தப் பெண் மறுநாள் காலையில் நீராடி,உணவு தயாரித்து விட்டோபாவுக்கு எடுத்துச் சென்றாள். அவர் அதைத் தொடவே இல்லை. எறும்பும் காக்கைகளும் ,நாய்களும் உண்டன. தொடர்ந்து 48 நாட்கள் எடுத்துச் சென்றாள். காக்கைகளும், நாய்களும் ,குருவிகளும் உண்டன. 49 ம் நாள் விட்டோபா ஒரு கைப்பிடி சோற்றை எடுத்து வாயில் போட்டு

,தூ தூ என்று அவளது முகத்தில் துப்பினாராம். மாறுநாள் காலை அப்பெண்ணுக்கு முகம் குணமாகியது, ஒருவாரத்தில் மாசுமறுவற்று காட்சியளித்தாளாம்.


அந்தப் பெண், காக்கை, குருவி, நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவளித்து பரிகாரங்களைச் செய்துவிட்டாள். அந்த ஞானி அதை வைத்து

அவளைக் குணப்படுத்தி விட்டார். எனவே பரிகாரம் ஊழ்வினையை மாற்றியமைக்கிறது என்பதை நம்மால் உணரமுடிகிறது.


சரி முன்வினைப்படி வறுமையில் வாடுபவர்கள், அதை மாற்றி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள முடியுமா? ஆதிசங்கரரின் வாழ்க்கையில் ஒரு கதை வருகிறது. ஆதி சங்கரருக்கு ஒரு நெல்லிக்காயை பிச்சையிட்டதற்காக, தருமசீலை என்ற பெண்ணின் வறுமையைப் போக்க ஆதிசங்கரர் மகாலக்ஷ்மியை வேண்டி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடுகிறார்.


நேரில் தோன்றிய மகாலக்ஷ்மி, ‘இவள் முன்பிறவியில்

செல்வமிருந்தும் எந்த நல்லகாரியமும் செய்யவில்லை. எனவே இப்பிறவியில் இவள் வறுமையில் வாடுகிறாள். அது இவளதுவிதி என்கிறார்.


தாயே, இப்பிறவியில் இவளது குணமும் செயல்களும் நல்லதாக இருக்கிறது. இப்பிறவியில் செல்வத்தைப் பெற அவளுக்குத் தகுதி அவளுக்கு இருக்கிறது, உனது கடைக்கண் பார்வை இருந்தால் எதுவும்

நடக்கும் என்று மகாலக்ஷ்மியிடம் வாதிட்டு, அந்த ஏழைப்பெண்ணுக்கு செல்வத்தை வழங்க வழி ஏற்படுத்தித் தருகிறார்.


எனவே வேதாளமே! விதி வலியது என்பதும், ஊழ்வினை தொடர்ந்து வந்து உறுத்தும் என்பதும் உண்மையே..


விதி என்று ஒன்று இருந்தால் அதற்கு விதி விலக்கு ஒன்றும் இருந்தே தீரும் என்பதும் உண்மைதான்.


விதியை மதியால் வெல்லாம் என்று சொல்கிறார்கள் அல்லவா? அதாவது மதி என்றால்- சுய அறிவின் மூலம், விதியை வெல்லக்கூடிய வலிமை மிக்க இறைவனை சரணாகதி அடைந்து அவனது கருணையைப்

பெற்றுவிடுவதன் மூலம் விதியை வென்றுவிடலாம்.


‘பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை நன்னி நின்றறுப்பது நம சிவாயவே!’ என்கிறார் அப்பர் பெருமான். ‘நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழனநகராரே’ என்று பாடுகிறார் சம்மந்தர் இறைவழிபாடு , மற்றும் பரிகாரங்கள் மூலம், பாவத்தின் தன்மையைப் பொறுத்து, நமது பாவங்களை போக்கிக் கொண்டு விடலாம். அல்லது குறைத்துக் கொண்டுவிடலாம் என்பது உண்மை.

மணி , மந்திர, ஓளஷத முறையில் விதியை மாற்றியமைக்க முடியும். மணி - ஜோதிடம், மணியியல் முதலியவை. மந்திரம்-யாகம், பரிகாரம் , வழிபாடு

ஓளஷதம்- மருந்து, மூலிகை, வைத்தியமுறைகள். இவை யாவும் மனித முயற்சிகள். முயற்சிக்கு ஏற்ற வகையில் திருவினையாகும்.


வேதாளமே! ஒரு சின்ன உதாரணம் மூலம் உன் கேள்விக்கான பதிலை நிறைவு செய்கிறேன்..


மழைபெய்கிற போது ஒரு குடையை பிடித்துக் கொண்டு போனால் மழையில் நனையாமல் போய்விடலாம்.


மழை என்பது விதி என்று வைத்துக் கொண்டால், இங்கு குடை என்பது மனித முயற்சி, பரிகாரம், வழிபாடு எனக் கூறலாம்.


மழை கடுமையாக இருந்தால், ¢குடை இருந்தாலும், சற்று சாரலில் நனைந்து விடச் செய்வோம். ஆனால் முழுவதும் நனையாமல் தப்பித்துவிடுவோம்.


விதி கடுமையாக இருந்தால், பரிகாரம், வழிபாடு மூலம் அதிக பாதிப்பின்றி ஓரளவு கஷ்டத்தோடு தப்பித்துவிடலாம்.


வேதாளமே! உன் கேள்விக்கான பதிலை என் சிற்றறிவுக்கு எட்டிய வரைச் சொல்லியுள்ளேன். உனக்குப் விளங்கிருக்கும் என நம்புகிறேன். ஆன்மீக சான்றோர்கள் , இதை இன்னும் விளக்கமாகவும் சொல்லக்கூடும்.. வேதியன் கூறி முடிக்கிறான்.


சரியான அவனது பதிலால், அவனது மௌனம் கலைந்ததால், வேதாளம் அவனிடம் இருந்து விடுபட்டு மீண்டும் புளிய மரத்திற்குச் சென்று, கிளையொன்றைப் பற்றிக்கொண்டு தலைகீழாக தொங்க ஆரம்பித்தது.




Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page