மகா சிவராத்திரி
- மதிவாணண்
- Jun 20, 2022
- 2 min read
ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந் தார்ந்திருந் தான்அருட்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
தியு மாய்நித்த மாகிநின் றானே.
- திருமந்திரம் 14
சிவனே ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஜீவனாய் இருப்பவர். சிவனே ஜீவன். எனவே சிவ வழிபாடு சுய வழிபாடே. நம்மை நாமே வழிபாடு செய்யும் முகமாக சிவனை வழிபாடு செய்யும் இரவே சிவராத்திரியாகும். இவை ஆழ்ந்த ஆன்மீகப் பொருள். அதே சமயம் நாம் யாரும் ஜீவனை அறியாதவர்கள். அதாவது ஆத்மனை அறியாதவர்கள். பரமாத்மனை வழிபாடு செய்வதன் வழி இந்த ஜீவாத்மாவை கடைத்தேற்றும் வழியை நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதற்காகத்தான் சிவராத்திரி வழிபாடு.

சிவராத்திரிக்கான விளக்கம் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியில் ஒரு காலத்தில் உலகில் பிரளயம் ஏற்பட்டபோது, அதிலிருந்த உயிரினங்கள் யாவும் சிவனுள் ஓடுங்கின. இதனால் அண்ட பிரம்மாண்டங்கள் அசைவற்று இருந்தன. அம்பிகை இந்த உலகம் மீண்டும் இயங்க வேண்டும் என்ற கருணை மனதோடு, ஒரு மக நட்சத்திர மாதத்தின் தேய்பிறை சதுர்த்தி திதியில் நான்கு ஜாமங்களும் தவமிருந்து சிவவழிபாடு மேற்கொண்டாள். சிவனும் அம்பிகையின் விருப்பத்தை நிறைவேற்ற, உயிர்களை யாவற்றையும் மறுபடியும் படைத்தார்.
அம்பிகை சிவனை வழிபட்ட காலமே சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி விரதம் மேற்கொண்டு இரவு முழுவதும் சிவனை வழிபாடு செய்பவர்கள் எல்லா வளங்களையும் பெற்று வாழ்ந்து முக்தி பெற வேண்டும் என்று அம்பிகை வேண்டிக் கொள்ள, சிவபெருமான் அதை ஏற்றுக் கொண்டார்.அதை மெய்ப்பிக்க.. நந்தி பெருமானும் சனகாதி முனிவர்களும், இந்த சிவராத்திரி விரதத்தை மேற்கொண்டு முக்தி பெற்றார்கள் என்கிறது புராணம். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி இரவு சிவராத்திரியாக அமைகிறது. மாசி மாதம் இடம் பெறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்)தேய்பிறை சதுர்த்தி திதி இரவில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த நீண்ட இரவில், பூமியின் அதிர்வானது மனிதனை உயரிய தன்மையை நோக்கி ஈர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது, பூமியின் எழுச்சி கூடியிருக்கிறது. முதுகுத் தண்டானது
நேராய் இருக்கும் நிலையில் தியானத்தில் ஆழ்பவனுக்கு தியானம் சித்திக்கிறது.
தொடர்ந்து அவன் மாதம்தோறும் இடம்பெறும் சிவராத்திரி தினத்தை அனுசரித்து லிங்க தியானம் மேற்கொண்டு வருவானேயானால் அவன் ஆன்ம தரிசனத்தையும் பெறுகிறான். யோக வழியில் செல்பவர்கள் சிவபெருமானை ஆதிகுருவாக கொள்கிறார்கள். சிவனே முதல் குரு ஆவார். யோகிகளின் பாரம்பரியத்தில் சிவனை கடவுள் என்பதை விட குரு என்ற நிலையில் வைத்தே வழிபாடு செய்கிறார்கள்.
சிவராத்திரி விரத சிறப்பு
ஒரு சிவராத்திரி தினத்தில் வேடனொருவன் புலிக்கு பயந்து வனத்திலிருந்த ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொள்கிறான். புலி அவ்விடத்தை விட்டு நகரவில்லை. இரவு நேரம்.. உறங்கி கீழே விழுந்து விடாமலிருப்பதற்காக, விழித்திருக்கும் ஏற்பாடாய் மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாய் பறித்து , கீழே போட்டுக்கொண்டேயிருக்கிறான். அவன் ஏறியிருந்த மரம் வில்வமரம். அதனடியில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அன்று சிவராத்திரி தினம். சிவராத்திரி தினத்தில் அவன் வில்வ இலைகளை பறித்து எறிந்ததில் அது சிவலிங்கத்தின் மேல் விழுந்து கொண்டேயிருந்ததால், சிவராத்திரி வழிபாட்டினை மேற்கொண்ட பலன் பெற்று, சிவனருளால் அரசன் போல் வளம்பெற்று வாழ்ந்து, அடுத்தப் பிறவியிலும் ஓர் அரசனாக வாழ்ந்தான் என்கிறது புராணம் நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நாம் எங்கு செல்லப் போகிறோம் என்ற அடைவிடத்தை தீர்மானிக்கிறது. இது ஆன்மீகத்திற்கும் பொருந்தும், லௌகீகத்திற்கும் பொருந்தும். ஆனாலும் நம்மை அறியாமல் நாம் செய்து விடும் நற்காரியங்களும் கூட அதற்குரிய பலனை நிச்சயமாய் தரும் என்பதையும் பலரின் வாழ்க்கையில் நாம் படித்திருக்கிறோம். ஒரு மனிதனால், சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யப்படும் சரியான செயல்கள் அத்தகைய பலன்களைத் தருவதுண்டு.
ஓர் இல்லறவாசியாய் தன் குடும்பத்திற்கு உணவு தேடுவதற்காக வந்த வேடன் பகல் முழுவதும் உணவில்லாமல் அலைகிறான், இரவிலும் விழித்திருந்து, சிவபூஜையை செய்வதற்கு ஒப்பான காரியத்தை செய்கிறான், அவன் மேற்கொண்டது சரியான சிவராத்திரி விரதம், பூஜையாகிறது. வீட்டிற்குச் சென்று அதிதிக்கும் உணவளித்து, தன் உணவை உண்கிறான். எனவே சிவராத்திரி விரதம் மேற்கொண்ட பலன் அவனுக்குக் கிடைத்து சிவனருள் பெறுகிறான். இவ்வளவு சிறப்புப் பெற்ற சிவராத்திரி விரதத்தை கடைப்பிடித்து இரவில் விழித்திருந்து சிவனை வழிபாடு செய்பவர்கள். சிவனருள் பெற்று சொர்க்கத்தில் இன்புற்று வாழ்ந்து சிவனின் திருவடியை அடைவார்கள்.
Comments