மாசி மகம் திருவிழா
- மதிவாணண்
- Jun 20, 2022
- 2 min read
மாசி மாதம் புனிதமான மாதமாகும். பெருமாளுக்கு உகந்த மாதம்
ம்மாதத்தில் செய்யும் காரியங்கள் இரட்டிப்புபலன் தரும் என்கிறார்கள்.
மாசி மாத மக நட்சத்திரத்தில் இவ்விழா அனுசரிக்கப்படுகிறது.

இத்தினத்தில் புனிதத் தீர்த்தங்களில் நீராடி இறைவழிபாட்டினை மேற்கொள்வதன் வழி, நம் கர்மவினைகள் குறிப்பாக தீவினைகள் களைந்து போகும் என்கிறது புராணம். இத்திருவிழா தென்னிந்தியாவில் மிகவும் சிரத்தையோடு கொண்டாடப்படுகிறது.
12 வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் மகத்திருவிழா மகா மகம் எனப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அமிர்த கலசத்தை அசுரர்கள் தூக்கிக்கொண்டு ஓட, தேவர்கள் அதைப் பிடுங்கிச் செல்ல.
இந்த இழு பறி போராட்டத்தில் தளும்பிய அமுதகுடம் சில இடங்களில் சிந்தியதாம். அந்த இடங்களில் மகாமகம் விழா நடைபெறுகிறது என்கிறார்கள். லட்சக்கணக்கில் மக்கள் நீராடி தங்களின் வினைகளை களைந்து கொள்கின்றனர்.
மாசி மகத்தினத்தில் தெய்வங்களும் பூமிக்கு வருகை தந்து புனித நீராடல் செய்கின்றனர் என்பது ஐதீகம். மேலும் இத்தினத்தில் நீராடும் பக்தர்களுக்கு
தங்களின் அருளையும் தருகின்றனர். இத்தினத்தில் பித்ருக்களும் புனித தீர்த்தங்களில் நீராடி, தங்களின் வினைகளைக் களைந்து கொண்டு, மனம் மகிழ்ந்து தங்களின் சந்ததியினருக்கும் அருளாசி வழங்கிச் செல்கின்றனர்.
ஏனெனில் மக நட்சத்திரம் பித்ரு தேவர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
இந்த தினத்தில் விரதமிருந்து இறைவழிபாடு மேற்கொண்டால் மறுபிறவி அமையாது என்பது புராணங்கள் கூறும் கருத்தாகும்.
தீர்த்தவாரி திருவிழா
தமிழகத்தில் தீர்த்தவாரி திருவிழா பெரும்பாலும் அனைத்துக் கோயில்களிலும் நடைபெறுகிறது. உற்சவர் விக்ரஹமும் இதர தெய்வங்களின் சிலைகளும் ரதங்களில் ஊர்வலமாக அருகிலிருக்கும் ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மந்திரங்கள் ஓத, நீர்நிலையில் விக்ரஹங்களுக்கு புனித நீராடல் நடைபெறுகிறது. பக்தர்களும் நீரில் மூழ்கி எழுகின்றனர். அதன்பின் விக்ரஹங்களுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜையும் நடைபெறுகிறது. அதன்பின் ரதத்தில் ஏறும் உற்சவர் சிலைகள் கோயில்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில கோயில்களில் தெப்பத்திருவிழா நடைபெறுவதுண்டு. தெப்பக்குளம் இருக்கும் கோயில்களில் மூங்கில்களால் தெப்பம் கட்டி மிதக்குமாறு செய்வார்கள். உற்சவர் விக்ரகம் சர்வ அலங்காரங்களுடன் அதில் வைக்கப்படும் தெப்பம் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருக்கும். தெப்பத்தில் குருமார்கள் மந்திரங்கள் ஓத, நாதஸ்வர தவில் கலைஞர்களின் இசை முழங்க அத்தெப்பம் குளத்தைச் சுற்றி
வரும். ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். மாசி மக தினத்தில்தான் தட்சனின் மகள் தாட்சாயணியாக அவதாரம் செய்தார் என்கிறார்கள். பெண்கள் இத்தினத்தில் விரதமிருந்து உமாதேவியை வழிபாடு
செய்கிறார்கள்.தமிழகத்தில், கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடி தங்கள் வினைகளை களைந்து கொள்ள பக்தர்கள் நாடெங்குமிருந்து மாசிமக தினத்தில் இத்திருத்தலத்திற்கு வருகை தருகிறார்கள். மேலும் கங்கை காவிரி, யமுனை உட்பட அனைத்து புண்ணிய நதிகளும் மகாமக குளத்திற்கு வந்து நீராடி, பக்தர்களின் பாவங்களை கரைத்த பின் அடைந்த மாசினைப் போக்கிக் கொண்டு தூய்மை அடைகிறார்கள் என்பது புராணத் தகவல்.மாசி மகத்திருநாளை ஒட்டி ஒரு கதை சொல்லப்படுகிறது.
புண்டரிக மகரிஷி என்ற முனிவர், பாற்கடலில் துயில் கொண்டுள்ள பரந்தாமனின் பாதத்தில் தாமரை மலரைச் சாற்றி வழிபாடு செய்ய விரும்பி, பாற்கடலுக்கு வழியமைக்க, கடல் நீரை முகந்து வெளியில் கொட்டிக் கொண்டேயிருந்தாராம். இவரின் தளரா முயற்சியைக் கண்டு இரங்கிய மகாவிஷ்ணு, அவரது காணிக்கையை ஏற்றுக் கொள்ள மனம் கொண்டு, நடை தளர்ந்த ஒரு முதியவர் வேடத்தில் புண்டரிக மகரிஷியை அணுகி, எனக்கு பசியாய் இருக்கிறது..
ஊருக்குள்சென்று உணவு வாங்கி வாருங்கள், அதுவரை நான் நீரை இரைக்கிறேன் என்றார். மகரிஷியும் சம்மதித்து ஊருக்குள் சென்று உணவு வாங்கி வருகிறார். திரும்பிய ரிஷி, கடல் நீர் முழுவதும் இரைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து நிற்க,

இறைவன் பாற்கடலில் துயிலும் வடிவில், மகரிஷி கொண்டு வந்த தாமரை மலர்களை தன் பாதங்களில் சாற்றியிருக்க காட்சியளித்தாராம். தன் கரங்களால் மகாவிஷ்ணுவே சேதுசமுத்திர நீரை இரைத்ததால், மாசி மகத்தன்று சேது சமுத்திரத்தில் நீராடி மக்கள் தங்கள் வினைகளை களைந்து நலம் பெறுகின்றனர் மற்றொரு கதையில் சிவபெருமான் இடம்பெறுகிறார். திருவண்ணாமலையில் வல்லாளன் என்ற அரசன் வாழந்து வந்தார். அவருக்கு சந்தான பாக்கியம் இல்லை. தான் இறந்தால் தனக்கு யார் கொள்ளி வைத்து இறுதி சடங்கை நடத்துவார் என அவருக்குக்கவலை. அன்றாடம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரிடம் தன் மனக்குறையை வெளிப்படுத்தி வந்தார். சிவபெருமான் ஒரு சிறுவனின் வடிவில் வல்லாளனின் முன் தோன்றி, கவலைப்படாதே வல்லாளா! நானே உன் மகனாய் நின்று உன் இறுதி கடனை முறைப்படி நடத்துவேன் என்று கூறுகிறார். அதே போல் அரசன் மறைந்த பின்னர் ஒரு மகனாய் நின்று அவருக்குரிய இறுதிச் சடங்கினை நடத்தி வைத்து, அங்கிருந்த குளத்தில் மூழ்கி மறைந்தாராம்.
இது நடந்தது ஒரு மாசி மக நாளில். அரசனுக்கு சிவபெருமான் ஏற்கனவே அளித்த உறுதி மொழிப்படி, இத்தினத்தில் யார் புனித நீர்நிலைகளில் மூழ்கி வழிபாட்டினை மேற்கொண்டாலும் அவர்களின் வினைகளைக் களைந்து மோட்சத்தை அருள்வார் என்று இக்கதை இயம்புகிறது. திருச்செந்தூர் முருகன் ஆலயம் இத்தினத்தில் விழாக்கோலம் காண்கிறது. மாசிமாதத்தில்
முருகப்பெருமானுக்கு 12 நாள் உற்சவம் நடைபெறுகிறது.
Comments