top of page

பங்குனி உத்திர சிறப்பு கட்டுரை

திருப்புகழைப் பாடப் பாட வாய்

மணக்கும் -

எதிர்ப்புகளை - முருகா!

உன் வேல் தடுக்கும்!


தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமானை முதன் முதலில் பாடிப் போற்றியவர் நக்கீரர் என்றும், அவர்பாடிய செய்யுட்கள் திருமுருகாற்றுப் படை என்றும் சொல்லப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை இயற்றினார். குமரு குருபரர், பாம்பன் சுவாமிகள், ஆதிசங்கரர், காளிதாஸர் &இப்படிப் பலர் முருகனைப் பற்றி செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.இவற்றில், முருகப்பெருமான், தானே காட்சி தந்து, ‘என் புகழைப்பாடு’ என்று கூறி, “முத்தைத்திரு பத்தித் திரு நகை அத்திக்கிரை சக்திச் சரவண” என்று அடிஎடுத்துக் கொடுத்துப் பாடச் செய்த,

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்கள் பெரும் சிறப்புப் பெற்றவையாகத் திகழ்கின்றன.


அ ரு ண கி ரி நா த ர் , திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள முள்ளந்திரம் என்ற ஊரில் பிறந்தவர். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், அருணகிரியின் சிறுவயதில், தாய் முத்தம்மாள் இறந்து போக, அருணகிரிநாதரை வளர்த்து ஆளாக்கியவர் அவரது சகோதரி ஆதி. ஆதி, தன் தம்பியை மிகச் செல்லமாய் வளர்த்ததால் அதுவே அவரின் தான்தோன்றித்தனமான குணத்திற்கு காரணமாயிற்று.


குணம் எப்படியிருப்பினும் அருணகிரியின் புத்திக் கூர்மை அதிகம். முருகப்பெருமான், ஒவ்வொரு தமிழரின் குடும்பத்திலும் உறுப்பினர் ஆனதற்கு இவரது திருப்புகழ் முக்கியகாரணமாய் ஆனது என்ற கூற்றில் தவறில்லை எனலாம். முருகனின் பெருமையை மட்டுமன்றி தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவதற்கும் திருப்புகழின் செய்யுட்கள் காரணமாகும். அருணகிரி இளம் வயதில் பெண்களின்பால் அதிகம் நாட்டம்

கொண்டவராய் இருந்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டார். நோயால்

துன்புற்றார். ஆனாலும் விலைமாதரிடம் செல்வதை நிறுத்தவில்லை. அதற்காக தன் தமக்கையிடம் பணம் கேட்டு வற்புறுத்துவார். ஒரு முறை தமக்கையிடம் பணம் கேட்டு, மிக கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தார். ஆதியோ “தம்பி, என்னிடம் பணம் இல்லை. வேண்டுமெனில்

என்னை விற்று அப்பணத்தை எடுத்துக் கொள்” என்றதும் அருணகிரிக்கு சவுக்கடி பட்டது போன்ற மனவலி ஏற்பட்டது. செய்த தவறுகள் யாவும் அவரை வருத்தின. அதன்பின் திருவண்ணாமலை வல்லாள கோபுரத்தின் மேல் ஏறி அங்கிருந்து குதித்து உயிர்விடத் துணிந்தார். முருகப்பெருமான் அவரைத் தடுத்தாட்கொண்டார். அழகியத் தோற்றத்துடன் காலடியில் மயிலுடனும், கையில் ஒளிரும் வேலுடனும் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக்

காட்சித் தந்தார்.


அக்காட்சியில் மெய்மறந்த அருணகிரி, வார்த்தைகள் ஏதும் பேச முடியாமல் வணங்கியபடி நின்றார். முருகப்பெருமான் கனிவுடன் அவருக்கு உபதேசம் செய்து, ‘இனி என் புகழைப்பாடு’ என்று ஆணையிட்டார். கந்தனின்கருணையினால் நோயற்ற பொலிவான உடல் பெற்ற அருணகிரி,

துறவுத் தன்மையை அடைந்தார்.


முருகனின் புகழ் பாடும் தெய்வீகப் பாதையில் செல்ல ஆரம்பித்தார். திருத்தலம் திருத்தலமாய் சென்று முருகனின் புகழைப் பாடிக் கொண்டேயிருந்தார். அருணகிரிநாதர், இளையனார் கோயில் என்றழைக்கப்படும் முருகப்பெருமானின் சந்நிதியில் அமைந்திருக்கும் அருணாச்சலேஸ்வரர் சிலையருகே தவத்தில் ஆழ்ந்தார். சிவனின் காட்சியினையும், அவரிடமிருந்து திருநீற்றினையும் பெற்றார். வள்ளியம்மையின் ஸ்பரிஷ தீட்சையையும், ‘நின் பிறப்பு ஒழிக’ என்ற ஆசியினையும் பெற்றார். ஞானம் அடைந்த அருணகிரிநாதர் அழகிய திருப்புகழை பல்வேறு செய்யுள் நடைகளில் பாடி, முருகனின் பெருமைகளை எடுத்துச் சொல்லிக் கொண்டே தன் புனித பயணத்தைத் தொடர்ந்தார்.


வழியெங்கும் பல்வேறு திருத்தலங்களைத் தரிசித்துப் பாடிக் கொண்டே மதுரையை அடைந்த அருணகிரி நாதரை எதிர்கொண்டு, குழந்தை வடிவில் முருகப் பெருமான் வரவேற்றார், ஏறக் குறைய 300 திருத்தலங்களை தரிசித்து திருவண்ணாமலை திரும்பிய அருணகிரிநாதரை மன்னன் பிரபுத தேவராயன் வரவேற்றான். அரசவைக் கவி என்ற அந்தஸ்தையும் வழங்கினான்.


முருகனின் காட்சியை அரசனுக்குக் காட்டுதல்


அருணகிரிநாதரை சிறப்பித்தது அவருக்குப் பிடிக்கவில்லை. அருணகிரியால் மன்னனிடம் தன் செல்வாக்கு குறையும் என்ற கருதி, அதற்கொரு முடிவு கட்ட

திட்டம் தீட்டினார்.மன்னா! அருணகிரிநாதரின் இஷ்ட தெய்வம் முருகன் என்கிறீர்கள். முருகன் பல முறை அவருக்குக் காட்சி தந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அவர் கண்ட அந்த முருகனின் காட்சியை நீங்கள் பெற வேண்டாமா? என்று தூண்டிவிடுகிறார். “சம்பந்தா! நீங்களும் தேவி உபாசகர்தானே? நீங்கள் முதலில் தேவியை நமக்கு முன் தோன்றச் செய்யுங்கள், அதேபோல் அருணகிரிநாதரும் முருகப் பெருமானின் தரிசனத்தை எனக்கு காட்டட்டும் என்றார் மன்னர்” அருணகிரிநாதர் மன்னரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார். குறிப்பிட்ட நாளில், மன்னன் தன் குடும்பத்துடன் திருவண்ணாமலை திருக்கோயில் மண்டபத்தில் அமர்ந்திருக்க, மந்திரிபிரதானிகள், சேனாதிபதிகள், முக்கிய அதிகாரிகள் யாவரும் கூடியிருந்தனர், தேவி உபாசகரான சம்பந்தர், தேவியின் பாடல்களைப் பாடி, மந்திரங்களை உச்சரித்து, தேவியை காட்சிதருமாறு அழைத்தார். தேவி தோன்றவில்லை. பின்னர் அருணகிரிநாதர் அழைக்கப்பட்டார். அவர் முருகனைப் பாட ஆரம்பித்தார்.


அதல சேட னாராட அகில மேரு மீதாட

அபின்காளி தானாட அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையிலேறு

வாராட

அருகு புத வேதாள மவையாட

மதுர வாணி தானாட மலரில்

வேதனாராட

மருவு வானு னோராட மதியாட

வனச மாமி யாராட நெடிய

மாமனாராட

மயிலு மாடி நீயாடி வரவேணும்



என்று பாடி முடித்தார்.



அடுத்த நொடியில், மண்டபத்தின் தூணிலிருந்து வெளிப்பட்ட முருகப் பெருமான், மயிலோடும் வேலோடும் அனைவருக்கும் காட்சி தந்தார். (அவர் வெளிப்பட்ட தூண் இன்றும் அம்மண்டபத்தில் இருக்கிறது).அருகில் முருகப் பெருமானின் சிறு விக்ரஹமும் அமைந்துள்ளது. கம்பத்திலிருந்து தோன்றியதால் இம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்று அழைக்கப்படுகிறார்.


(சம்பந்தனின் வேண்டுகோளுக்கு இணங்கி, தேவி அவையில் தோன்றினார் என்றும், ஆனால் அவரின் உருவம் சம்பந்தனின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது, அவையோரால் தேவியைப் பார்க்க முடியவில்லை என்றும் சில

கதைகளில் கூறப்பட்டுள்ளது.


தேவியின் தரிசனம் பிறருக்குக் கிடைக்காததால் அவர் தேவியிடம், முருகப்பெருமானின் காட்சியும் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்ள, தேவி, முருகப் பெருமானை குழந்தையாக்கி தன் மடியில் இறுத்திக் கொண்டார் என்றும், ஞானத் தன்மை உடைய அருணகிரிநாதர் இதை அறிந்து, தேவாந்தர சங்க வகுப்பு என்ற பாடலையும், மயில் விருத்தத்தையும் பாட, தேவியின் முன் மயில் நடனமிடுகிறது.இதைப் பார்த்த தேவி, கவனம் சிதறி தன் பிடியைக் கைவிட, முருகன் மயில் மீதேறி மண்டபத்தில் தோன்றி அனைவருக்கும் காட்சி தந்தார் என்றும் சில நூல்களில் தகவல் உண்டு.


அருணகிரி நாதரும் முருகனைப் போற்றி..


அகரமு மாகி யதிபனு மாகி அகமாகி

அயனென வாகி அரியனெ வாகி

அரனென வாகி

அவர்மேலாய்;

இகரமுமாகி யெவைகளு மாகி

யினிமையு மாகி

வருவோனே-

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு

னோடி

வரவேணும்

மக பதியாகி மருவம்வ லாரி மகிழ்களி

கூரும்

வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்

கதிர்காம முடையோனே

என்ற பாடலை பாடுகிறார்.


அருணகிரிநாதரின் தூய்மையான மனதில் உருவாயிருந்த உண்மையான பக்தியை மெச்சியே முருகனும் அவருடைய வேண்டுகோளுக்கிணங்கி காட்சி தருகிறார். அதே சமயம் சம்பந்தனின் பொறாமை குணத்தினாலேயே காளியின் காட்சி பிறருக்கு தெரியவில்லை என்பதே உண்மை.


கிளியாய்மாறிய அருணகிரிநாதர்


தேவியின் தரிசனம் அவையோருக்கு கிடைக்காத காரணத்தில் அங்கிருந்து

வெளியேறி. சம்பந்தன் தலைமறைவான சமயத்தில், ஒளி பொருந்தி வடிவுடன் முருகப் பெருமான் காட்சி தந்ததில், மன்னன் பிரபுத தேவராயனின் கண்பார்வை பறிபோய்விட்ட தகவல் அவருக்குக் கிட்டியது. மறுபடியும் மன்னனிடம் வந்து சேர்ந்தார்.


மன்னா! நாட்டை விட்டு வெளியேறிய நான், தங்களுக்கு கண்பார்வை போய்விட்டது என்ற தகவலை அறிந்து பதறிப் போய்விட்டேன். எனக்குத் தெரிந்தவரையில் தங்களுக்கு கண்பார்வை திரும்பக் கிடைக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.


வேறெந்த வழியும் இல்லை. தேவலோகத்தில் இந்திரனின் தோட்டத்தில் மலர்ந்திருக்கும் பாரிஜாத மலரைக் கொண்டு வந்து அதன் சாற்றை கண்களுக்குள் இட்டால் திரும்பவும் உங்களுக்குக் கண்பார்வை நிச்சயமாய் கிட்டும். ஆனால் தேவலோகத்திற்கு செல்லும் ஆற்றல் நம்மில் எவருக்கும் இல்லை. தேவ சேனாதிபதியான முருகப் பெருமானின் பக்தரான அருணகிரியால் மட்டுமே அங்கு செல்ல முடியும். அவர் காரணமாகத்தானே

நீங்கள் கண்பார்வையை இழந்தீர்கள். எனவே அவரையே இந்திரலோகம் சென்று பாரிஜாத மலைரை கொண்டுவரப் பணியுங்கள் என்று பவ்யமாக தன் வேலையைக் காட்டினார்.


மன்னன் அருணகிரிநாதரை அழைத்து, என் கண்பார்வை திரும்ப கிடைப்பதற்கு ஒரு வழி உண்டாம். பாரிஜாத மலருக்கு அச்சக்தி இருக்கிறதாம். தேவலோகத்தில் இருக்கும் அம்மலரை கொண்டுவரும் ஆற்றல் தங்களுக்கே உண்டு, நீங்கள் அதைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சிக்குச் சென்றார், என்ன செய்வது என்று யோசிக்கும்போது, அங்கு சற்றுமுன் இறந்து போன கிளியின் உடலைக் கண்டார். தேவலோகம் செல்ல இந்த உடல் சரியாக இருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தன் ஞானசக்தியால் உடலிலிருந்து

உயிரைப் பிரிந்து , கிளியின் உடலுக்குள் புகுந்தார்.


தேவலோகம் நோக்கிப் பறந்தார். அருணகிரி நாதரைப் பின் தொடர்ந்து வந்த சம்பந்தன், ஒளிந்திருந்து இதைப் பார்த்ததும், அருணகிரிநாதரை ஒரேயடியாய் அழித்து விடலாம் என்று முடிவு செய்தார். தேவலோகம் செல்ல முடியாத அருணகிரிநாதர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை மன்னனிடம் சென்று கூறினார். கவலையில் ஆழ்ந்த மன்னன், சரி இனி என்ன செய்வது? அந்த உடலை எரித்து விடுங்கள் என்றார். சம்பந்தன் உடனே தன் மேற்பார்வையில் அந்த உடலை எரித்து சாம்பலாக்கினார். முருகப் பெருமானின் ஆணைப்படி தேவேந்திரன், பாரிஜாத மலர்களைப் பறித்துக் கொள்ள கிளியாய் இருந்த அருணகிரிநாதருக்கு அனுமதி அளித்தான்.பாரிஜாத மலர்களுடன் பறந்து வந்த அருணகிரிநாதர் பூமிக்கு வந்ததும் , தன் உடல் எரிக்கப்பட்டு விட்டதை உணர்ந்தார், கிளி உருவிலேயே மன்னரிடம் சென்று பாரிஜாத மலரைக் கொடுத்தார். மருத்துவர்கள் அம்மலரைப் பிழிந்து சாற்றினை மன்னனின் கண்களுக்குள் இட்டனர்.


மன்னனின் கண்பார்வைத் திரும்பக் கிட்டியது. அருணகிரிநாதரின் உடலை எரித்ததற்காக மன்னர் வருந்தினார். அருணகிரிநாதர் கிளியாய் மாறியதை ஒட்டி திருவண்ணாமலை கோபுரங்களின் தூண் ஒன்றுக்கு கிளிகோபுரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிளியாய் மாறிய அருணகிரிநாதர் அதே உருவில் முடிந்தவரை குறைந்த எண்ணிக்கையில், எளிமையான செய்யுட்களால் ஆன கந்தர் அனுபூதி , கந்தர் அலங்காரம் போன்ற பாடல்களைப் பாடினார். கந்தர் அனுபூதி பாடல்கள் அருணகிரிநாதர், முருகப்பெருமானிடம் பெற்ற உபதேசங்களை 51 செய்யுட்களில் உரைக்கிறது.


கந்தர் அலங்காரம் முருகன் அணிந்திருக்கும் அணிகலன்களையும், முருகப் பெருமானின் அழகினையும் புகழ்வதாக அமைகிறது. சிவனுக்கு எப்படி திருவாசகமோ அப்படி கந்தனுக்கு சிறப்பு சேர்ப்பது கந்தர் அலங்காரம் என்கிற செய்யுள் தொகுப்பாகும். முருகனின் பெருமையை, தனக்கு முன்பிருந்த நிலையை விட மிக அதிகமாகவும், உலகுக்கே பறைசாற்றியவராகவும் திகழ்கிறார் அருணகிரிநாதர். இறுதியில் அவர் கிளி

உருவத்திலேயே முருகனின் தோளில் அமர்ந்தவாறு இருக்கின்ற தன்மையை

முருகப்பெருமானின் அருளால் பெற்றார்.








Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page