top of page

இராமாயணம்

தர்மத்தை நிலைநாட்டவும், தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதற்கு

முன்னோடியாக வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமர், தன் ஆருயிர் மனைவி ஜானகியை, மீண்டும் வனவாசத்தையே நிரந்தரமாக அனுபவிக்கும்படி பணித்தது தர்மமா?



உண்மையறியாத ஊர்மக்கள் பலவாறாகப் புரளி பேசுவதையே கலையாகக்

கொண்டவர்கள். இவர்களின் கூற்றினை புறக்கணித்திருக்கலாமே. அதை

விடுத்து சீதை கர்ப்பிணியாக இருப்பதையும் பொருட்படுத்தாமல்

ஆரண்யத்திற்கு அனுப்பி வைத்துவிட்டாரே?




இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள நெஞ்சை உருக்கும் இப்பகுதியைப் படித்துப் பாருங்களேன்.

அயோத்தியில் இராமராஜ்ஜியம் நடந்து கொண்டிருந்த காலம் அது.

சத்தியம், தர்மம்,நீதி, நேர்மை, பண்பு ஆகியவற்றின் இலக்கணமாக சக்கர

வர்த்திசெய்து கொண்டிருந்த காலம் அது.


அப்போது ஒருநாள் அயோத்தியின் அரண்மனையிலிருந்து அழகான ரதம் ஒன்று புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது.

தேர்ப்பாகனாக ரதத்தில் வீற்றிருந்தான் ராம, சேவைக்காகவே பிறப்பெடுத்த

தம்பி லக்ஷ்மணன்.ரதத்தினுள்ளே சீதாப் பிராட்டியார் வீற்றிருந்தாள்




பயணம் எங்கே என்று அன்னைக்குத்

தெரியும். ஆனால் எதற்காக என்று

தெரியாது.

தந்தை சொல் காக்க ஸ்ரீராமன் ஆரண்யம் சென்ற போது அவன் நிழலாகப் பின்தொடர்ந்து காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் ஸ்ரீராமனுடன் அலைந்து பல சிரமங்களை அனுபவித்தவள்.

கடுந்துயர்களை அவள் அனுபவித்திருந்தாலும், எளிமையான வனவாசம் அன்னை சீதைக்குப்

பசுமையான நினைவுகளாகவே இருந்தது.

அதனால் அயோத்தி திரும்பி அரண்மனை வாசம் ஆரம்பித்த பின்பு கூட கங்கைக் கரையும், பஞ்சவடியும் சீதையின் நினைவை விட்டு அகலவில்லை.

மீண்டும் அந்த காடு மலைகளையும், எழில்மிகு வனங்களையும் காண வேண்டும் என்று விரும்பிய தன் எண்ணத்தை நிறைவேற்றத்தான் தன்மீண,

எழில்மிகு வனங்களையும் காண வேண்டும் என்று விரும்பிய தன் எண்ணத்தை நிறைவேற்றத்தான் தன் கணவர் ஸ்ரீராமர்

மைத்துனனுடன் தன்னை அனுப்பியிருக் கிறார் என்று மட்டுமே சீதை எண்ணிக் கொண்டிருந்தாள்.


கர்ப்பிணியான சீதையை நிரந்தர மாகவே காட்டில் விட்டுவிட்டு வந்துவிடும்படி தம்பி லக்ஷ்மணனுக்கு அண்ணன் ராமன் இட்ட

கட்டளை அவளுக்குத் தெரியாது சிரித்த முகத்தோடு அன்னை ரதத்தில்

வீற்றிருந்தாள். கலங்கிய கண்களோடு கொடுமையான இந்தக் கடமையைச் செய்யும் துர்பாக்கியத்தை எண்ணிக் கொண்டு தேரைச் செலுத்தினான்

லக்ஷ்மணன். மீண்டும் ஒரு வனவாசம் சீதைக்கு ஆரம்பமானது.

நகரின் எல்லையைத் தாண்டியது ரதம். லக்ஷ்மணனின் மௌனத்தைக் கலைத்தது அண்ணியின் கேள்வி ஒன்று.


“லக்ஷ்மணா, வனவாசம் முடிந்து திரும்பி, பட்டாபிஷேகம் எல்லாம் நடந்தேறிவிட்டது. நீ இன்னும் உன் மனைவி ஊர்மிளையைப் பார்க்கக் கூடப்

போகவில்லையாமே? இது தர்மமா?”ஊர்மிளை என்ற பெயரைக் கேட்டவுடனேயே லக்ஷ்மணன் கண்கள் சிவந்தன முகத்தில் கோபக்கனல் வீசியது. அதனை அடக்கிக் கொண்டு மௌனம் காத்தான். ஒரு வினாடி, அவன் மனக்கண் முன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் மின்வெட்டாகத் தோன்றியது. அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் கொண்டிருந்தது. ஆனால் அயோத்தி மக்களின் கண்கள் எல்லாம் கண்ணீர்க் குளமாகக் காட்சியளித்தன.


பட்டத்திற்குரிய கோமகன் ஸ்ரீராமன் தந்தை சொல் காக்க மரவுரி தரித்துக்

கானகம் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை உருவாகியிருந்தது. கொதித்தெழுந்த லக்ஷ்மணன், வில்லிலே நாணேற்றி தசரதனையே அழித்துவிட்டு தன் அண்ணன் ராமனுக்குப் பட்டம் சூட்டி விடுகிறேன் என்று சூளுரைத்தான். ஆறுவது சினம் என்று அண்ணன் ராமன் தம்பியைத் தடுத்தாட்கொண்டு விட்டான். அண்ணனைப் பிரிந்து வாழ முடியாத நிலையில் தானும் அவருடன் கானகம் செல்வதாகக் கூறி கதறியழுது ராமனின்


அனுமதியையும் பெற்றுவிட்டான் லக்ஷ்மணன்.


ஆரண்யம் செல்லும் ராமனுக்குப் பணியாளனாக, சேவகனாக, காவலனாக

அவனும் புறப்பட்டுவிட்டான். கணவன் அடிச்சுவடே மனைவியின்

வாழ்க்கை நெறி என்று சீதா தேவியும் உடன் புறப்பட்டுவிட்டாள் என்று தெரிந்தது லக்ஷ்மணனுக்கு.


அப்போது அவன் மனதில் ஒரு திகில். சீதையைப் போன்று தன் மனைவி

ஊர்மிளையும் தன்னுடன் புறப்படுவதென முடிவு செய்துவிட்டால் என்ன செய்வது? எப்படித் தடுப்பது? எவ்வாறு சமாதானம் சொல்வது?

எவ்வித சுயநலமும் இல்லாமல்தான் அண்ணனுக்குப் பதினான்கு வருடம் பணிவிடை செய்ய வேண்டும் என்ற விரதம் என்ன ஆவது

என்றெல்லாம் குழம்பினான்.


அந்தப்புரத்தில் நுழைந்தான். ஆனால் அவன் கண்ட காட்சி

அவனை அதிர வைத்தது. ஊரே அழுது புலம்பிக் கொண்டிருந்த

அந்நேரத்தில், அவன் மனைவி ஊர்மிளை மட்டும் ஆடை அணிகலன்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டு ஒய்யாரமாக, உத்தயான வனத்தில் உலவிக் கொண்டிருந்தாள். தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவை நெருப்புப் பிழம்பாக மாறிற்று.


“நீங்கள் ஏன் கானகம் போக வேண்டும்?

மூத்தவர் பட்டத்துக்குரியவர். தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்றச்

செல்கிறார். எதற்கும் சம்பந்தமே இல்லாத நீங்கள் அரண்மனை வாசத்தையும், சௌபாக்கியங்களையும் துறந்து அவரைத்

தொடர்ந்து ஏன் போக வேண்டும்?” எவ்வித உணர்ச்சியுமே இல்லாமல் சாதாரணமாகக் கேட்டாள் ஊர்மிளை. லக்ஷ்மணன் கண்கள் உதிரத்தைக் கக்கின. அவை நெருப்புப் பொறியாக சிதறியது.

“அடி கிராதகி, அரண்மனையையும், ஆடம்பரத்தையும்

மட்டுமே நேசிக்கும் பிசாசா நீ? சீ இப்படியும் ஒரு பெண்ணா?

உன்னை என் மனைவி என்று சொல்லவே நா கூசுகிறது.

உன் பெயர் என் நாவை விட்டு நீங்கட்டும். உன் உருவம் என் கண்களை விட்டு

அகலட்டும். உன் நினைவு என் சிந்தனையிலிருந்து மறையட்டும். உன்

முகத்தில் இனி விழிக்கமாட்டேன்... போகிறேன்”என்று சொல்லிப் புறப்பட்டு விடுகிறான். மனக்கண் முன்தோன்றிய இந்தக் கடந்தகால கொடிய சம்பவம் லக்ஷ்மணனின் இதயத்தை உலுக்கியது.


“அண்ணி எது வேண்டு மானாலும் கேளுங்கள். அந்தக் கொடியவளின் பெயரை மட்டும் உச்சரிக்காதீர்கள். அவளை நான்சந்திக்காததன் காரணத்தை மட்டும் கேட்காதீர்கள்” என்றான்.

சீதை அமைதியாகப் பதில் தந்தாள்.


“காரணம் எனக்குத் தெரியும் லக்ஷ்மணா? யாரை நீ கொடியவள், கிராதகி, பேய், பேசாசு என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறாயோ அவள் உன் அண்ணி சீதையை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவளப்பா! வனவாசம் புறப்படுமுன் அவள் அலங்கார பூஷிதையாக உன் முன் நின்றது மட்டும்தானே உனக்குத் தெரியும். அப்படி ஏன் நின்றாள் என்ற காரணம் எனக்கு மட்டும்தான் தெரியுமப்பா. கேள்.


“உன் அண்ணன் கானகம் செல்கையில் நானும் உடன் புறப்பட்டுவிட்டேன். எங்கள் இருவருக்கும் தொண்டு செய்யும் பணியாளாக நீயும் புறப்பட்டு விட்டாய். எப்போதாவது தன் நினைவு ஏற்பட்டு அதனால் தன் கணவன் ஏற்றுக் கொண்ட பணியில் குறைவு ஏற்பட்டுவிடக்கூடாதேஎன்று கலங் கியிருக்கிறாள் ஊர்மிளை. தன் பிரிவினால் விரக தாபமும் ஏற்பட்டு

அண்ணனுக்குச் செய்யும் பணி விடையில் பங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்று

அஞ்சியிருக்கிறாள் அவள்.


தன் மீது வெறுப்பு ஏற்பட்டாலொழிய தன் கணவன் தன்னைப் பற்றி நினைக்காமல் இருக்கமாட்டார் என்று தெரிந்து கொண்டு தன் அன்புத் தெய்வமே தன்னை வெறுப் பதற்கான ஒரு சூழ்நிலையைத் தானாகவே

ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள். மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு நடித்திருக்கிறாள். எத்தனை துணிவு? எத்தனைத் தியாக உள்ளம்?

“உன் முகத்தில் இனி விழிக்க மாட்டேன்” என்று நீ கூறிச் சென்றவரை தான் உனக்குத் தெரியும். அதன் பின்பு கண்ணீரால் என் பாதங்களைக் கழுவி,

இந்த இரகசியத்தைக் கூறி வனவாசம் முடிந்து திரும்பும்வரை இந்த உண்மையை உன்னிடம் கூறக்கூடாது என்று என்னிடம்வாக்கும் வாங்கிக் கொண்டாள் அந்த உத்தமி. லக்ஷ்மணா, உன் ஊர்மிளை முன்பு நான் தூசுக்குச் சமம். தன்னலம் கருதாமல் இராம சேவையில் அர்ப்பணித்துக் கொண்ட உன்னைவிட தன்னையே அந்த யாகத்தீயில் நெய்யாக ஊற்றிக் கொண்ட ஊர்மிளை உயர்ந்தவளப்பா... இப்படியும் ஒரு பெண்ணா என்று எண்ணி என் உள்ளம் பூரிக்கின்றது. கண் இமைக்காமல் பதினான்கு ஆண்டுகள் இராமனை ஆரண்யத்தில் காத்து சேவகம் புரிந்த நீ உயர்ந்தவன்தான். ஆனால் கண்ணீரில் கண்களை மிதக்கவிட்டு, அன்ன ஆகாரமின்றி 14 ஆண்டுகள் பதியின் அன்புக்காக ஏங்கித் தவித்திருக்கும் ஊர்மிளை உன்னை விட உயர்ந்தவளப்பா. அவளை நீ வணங்கினாலும் பாவமில்லை” என்றுசீதை கூறிமுடித்தாள். லக்ஷ்மணன் கைகளிலிருந்து சேணங்கள் நழுவின. அவன் கண்கள் பஞ்சடைந்தன. குதிரைகள் நின்றன.

ரதமும் நின்றது. துயரமும், அதிர்ச்சியும் லக்ஷ்மணனை நாக்குழறச் செய்தன.

“அண்ணி எனக்கு ஒரு நல்ல செய்தியைத் தந்தீர்கள். உத்தமி ஒருத்தி

யாருக்கும் தெரியாமல் செய்த தியாகக்கதையைக் கூறி, என் அறியாமைக்

கண்களைத் திறந்தீர்கள். ஆனால் என்ன கொடுமை. தங்களுக்கு ஒரு துயரமான செய்தியைச் சொல்லும் கடமையில் நின்று தவிக்கிறேன் நான். கர்ப்பிணி என்றும் பாராமல் தங்களை நிரந்தரமாகவே இந்த வனத்தில் விட்டுவிட்டு வரும்படி அண்ணன் கட்டளையிட்டுவிட்டார். இந்த பாவப்பணியைச் செய்யும் கொடுமை என் தலையில் விழுந்துவிட்டது” என்று லக்ஷ்மணன் கூறி முடித்தான்.


சீதா தேவி அதிர்ச்சியடையவில்லை.

“உன் அண்ணன் அதற்குரிய காரணத்தை உன்னிடம் கூறச்

சொல்லியிருந்தாரா” என்று நிதானமாகக் கேட்டாள்.

ஆம்! அண்ணி யாரோ ஒரு பிரஜை. அந்நியன். ஆதிக்கத்தில் சிறையிலிருந்த சீதையை ராமன் மனைவியாக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் நான் நாட்டின் அரசியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதம்

செய்தானாம். அதற்காக” இலட்சுமணன் முடிக்கவில்லை.


அன்னை சீதையின் முகத்தில் ஒரு விரக்தியான பாவம் தோன்றியது. அதிலே வேதனை பிறக்கவில்லை. வேதாந்தம் பிறந்தது.


“பாவம் ராஜாராமனாக என்னைத் துறந்து வாழ்வதா? அல்லது சீதாராமனாக

என்னோடு வாழ்வதா என்பது உன் அண்ணனின் பிரச்சினை.

அவர் எடுத்த முடிவு சரிதான். தந்தையார் தன் மனைவிக்குக் கொடுத்த வாக்கிற்காக இவர் கானகம் சென்று அதனால் அயோத்திமக்கள் அரசனில்லாமல் 14 ஆண்டுகள் அவதிப் பட்டார்கள். இப்போதும் இவர் என்னோடு சீதாராமனாக வாழ விரும்பிவிட்டால் பாவம் அயோத்தி மக்களுக்கு மீண்டும் அரசில்லாத துர்பாக்கிய நிலை ஏற்படுமல்லவா?

அதனால் என்னைத் தியாகம் செய்துவிட்டார். ஆனால் லட்சுமணா உன் மனைவி ஊர்மிளை செய்த தியாகத்தின் முன்பு இவையெல்லாம்

ஒன்று மேயில்லை. ஒன்றுமட்டும் சொல்ல நினைக்கிறேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் எனக்கு இந்த தண்டனை தந்துள்ளார் உன் அண்ணன். அதற்கு என் ஆசைகளும் ஒரு காரணந்தான். நான் ஒரு விதத்தில் இந்தத் தண்டனைக்குத் தகுதியுடையவள் தான். ஆனால் எப்போதாவது ஏதாவது காரணங்களுக்காக ஊர்மிளைக்கு இதுபோன்று ஏதாவது சிறு தண்டனை நீ கொடுத்தாலும் அதனை தர்மம் பொறுக்காது. அதனால் ஆண்வர்க்கத்தின் தலைகளே வெடித்துவிடும். போ. தேர் திரும்பியது. லட்சுமணனின் பிராயச்சித்தம் படலம் ஆரம்பமாகியது. ஊர்மிளையையும் அண்ணி

சீதையையும் எண்ணி லட்சுமணன் வழி நெடுக வடித்த கண்ணீர் பூமியில்

அக்னித்துளிகளாக விழுந்தன.

 
 
 

Comments


  • YouTube
  • Instagram

©2023 by Thungeesam. Proudly created with Wix.com

bottom of page