அபரக் கிரியைகள் , உயிர் உடலை விட்டு சுமுகமாகப் பிரிய்
- thungeesamacc
- Dec 2, 2022
- 2 min read
Updated: Jan 16, 2023
ஆதிகாலம் தொட்டே ஒவ்வொரு இனமும் பல சடங்குகளைச் செய்து வருவது
கண்கூடாகத் தெரிகிறது.
ஒரு மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு நிலையையும் கடந்து இன்னொன்றில் புகும்போது அவனது குடும்பமும், சமுதாயமும் ஆகியவற்றுடன் அவன் கொண்டுள்ள உறவும் மாறுபடுகிறது.
இத்தகைய வேளைகளில் இப்புது நிலைகளின் சிறப்பு, பண்பு, பயன்
ஆகியவற்றை வலியுறுத்தவும், தீமையை அகற்றித் தெய்வத்தின் துணை, பாதுகாப்பு போன்றவற்றை அவன் பெறவும் பல சடங்குகள் நடத்தப்படுகின்றன.
மேலும் அவன் மனத்திட்பமும், சாந்தியும் பெறுவதற்கு இவை வழிவகுக்கும்.
சம்ஸ்காரங்கள் அந்தந்த இனத்தின் சமூக, சமய வழக்கங்களுக்கேற்ப
எண்ணிக்கையிலும், முறைகளிலும் வேறுபடும். இந்து மத சாஸ்திரங்கள் 52
சம்ஸ்காரங்களைக் கூறுகின்றன.
இவற்றில் பிறப்பு, பருவமடைதல், திருமணம், இறப்பு ஆகியவைகளே தலையானவை. இறப்பு வாழ்வின்இறுதிக் கட்டம். எனினும் உடலைப்
பிரிந்து செல்லும் உயிர், வீடு பேற்றை நோக்கி மேற் கொண்டிருக்கும்
தனது நீண்ட பயணத்தின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்கிறது.
பொதுவாக இந்துக்கள் இறந்தவர் உடலைத் தகனம் செய்கின்றனர்.
ஆனால் அதற்கு முன்பும், பின்பும் பிரிந்த உயிரின் நலன் கருதிப் பல
கிரியைகள் செய்யப்n படுகின்றன. இவை யாவும் சைவக்
கோட்பாடுகளுக்கு ஏற்பவே அமைந்திருக்கின்றன.
சைவ சமயத்தவர்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் கர்மங்கள், சைவ
சமய அபரக் கிரியைகள் அல்லது ஈமக் கடன்கள் எனப்படும்.
சைவர்கள் ஒருவரது உயிர் பிரியும் இறுதிக் காலத்தில் அவருக்காக நடத்தும்
கிரியைகளும் அவரது உயிர் பிரிந்த பின் அந்த உயிர் குடியிருந்த உடலுக்கும், பிரிந்தஉயிருக்கும் செய்யும் கர்மங்களும் அபரக் கிரியைகளில் அடங்கும்.
இக்கடன்களைப் பக்தி சிரத்தையுடன் நிறைவேற்றுவதால் உயிர் உடலை விட்டு சுமுகமாகப் பிரிந்து உயிர் தான் அடைய வேண்டிய அடுத்த நிலையை எளிதாகச் சென்றடையும். அந்த நிலையில் எவ்வித கலக்கமும் இன்றிச் சாந்தி பெறும்.
இவ்வாறு அமைதி பெற்ற உயிர்தான் முன்னர் கூடி வாழ்ந்து விட்டுப் பிரிந்த
குடும்பத்தினருக்கும், உறவினருக்கும் ஒரு கவசம் போல் பாதுகாப்பாக இருக்கும். அது அவர்களைத் துன்பம், நோய், அவமரணம் போன்றவற்றில் இருந்து காப்பதுடன், நீண்ட ஆயுள், மக்கட்செல்வம், பொருட்செல்வம் போன்ற நன்மை களையும் தரும். பூமியில் தேவையான மழையும், வளமும், நன்மையும் பெருகும்.
இக்கர்மங்களை ஆற்றிவரும் குடும்பத்தினரும் இம்மை, மறுமைகளில்
நற்பயன்களை அடைவர். அவர்களது இழப்பு, துயரம் ஆகியவற்றிலிருந்து விரைவில் மீளவும் இவை உதவும்.

உயிர் பிரியுமுன் ஒருவரது ஆன்மா பிரிவதற்குச் சிறிது
நேரம் முன்னதாகச் செய்யும் கிரியைகள் அந்தியக் கிரியைகள் எனப்படும். இதனை எல்லோருக்கும் செய்ய இயலாது. பல காலம் நோய்வாய்ப்பட்டவரும் அல்லது முதுமை காரணமாக துன்புறும் ஒருவரது உயிர் பிரியும் வேளை நெருங்கிவிட்டது என்ற நிலையிலேயே இக்கிரியைகள் நடத்தப்படும்.
இக்கிரியைகள் மூலம் உயிர் நிலையற்ற உலக வாழ்வு, பந்தங்கள் ஆகியவற்றை மறந்து இறைவனைப் பற்றிச் சிந்திக்க வைப்பதால்
இது அத்தியாவசியமாகிறது. பிரியும் ஆன்மா என்ன நினைப்புடனும், உணர்வுகளுடனும் நீங்குமோ அதற்கேற்பவே அதன் அடுத்த நிலை அமையும் என சாஸ்திரங்கள் விளக்குகின்றன.
இறைச் சிந்தனையுடன் செல்லும் உயிர் இறைவனது இனிய நிழலையே
நாடும். இறை நாட்டம் உலக பந்தங்களை வலுவிழக்கச்செய்யும்.
இதனால் பிறவிகள் ஒடுங்கி விரைவில் வீடு பேறு கிட்டும்.
எனவே தான் உயிர் பிரியும் நிலையிலுள்ளோர்க்கு அந்தியக் கிரியைகள்
செய்யப்படுகின்றன. இறப்பவர் நெற்றியில் விபூதி அணிவிக்க வேண்டும்.
அல்லது இயன்றால் வில்வ மரத்தடி மண்ணை உடல் முழுவதும் பூசி விடுதலும்
சிறப்பு.
இறப்பவர் செவியில் பஞ்சாட்சர மந்திரத்தை மென்மையாக ஓத வேண்டும்.
அல்லது சிவபெருமானின் மூல மந்திரத்தையும் உச்சரிப்பது சிறப்பு.
தேவாரம், திருவாசகம், வாழாப்பத்து போன்ற பாடல்களை மெதுவாக
நோயாளியின் காதுகளில் விழும்படி ஓதுதல் நல்லது.
முடிவில் மூச்சு அடங்கு முன் நெருங்கிய உறவினர்கள் இறப்பவரின்
வாயில் பாலை கரண்டியால் ஊட்ட வேண்டும். இக்கிரியைப் பிரியும்
ஆன்மாவுக்குத் திருப்தியளிக்கும் என்பதுடன் இதனைச் செய்பவர்களுக்கும்
தமது கடமையை ஆற்றிய நிறைவு ஏற்படுகிறது.

Comments